கொழும்பு துறைமுகத்தில் பரிசோதனை செய்யும் இயந்திரத்தால் (ஸ்கேன் இயந்திரம்) கொள்கலன் ஒன்றை பரிசோதிப்பதற்கு 12 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்ற போதிலும் அதனால் துறைமுகத்திற்கு எவ்வித இலாபமும் கிடைக்கப் பெறவில்லை என்று துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
துறைமுகத்தில் பரிசோதனை இயந்திர பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் பெரும் நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டமையாலே நான் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தேன். கொள்கலன்களை பரிசோதனை செய்வது நல்ல செயற்பாடாகும். அதற்கென உரிய முறை பின்பற்றப்பட வேண்டும். சிறந்த தரத்திற்கமைய ஸ்கேன் செய்தால் துறைமுகங்களில் நெருக்கடி நிலை ஏற்படாது.
நூற்றுக்கணக்கான கொள்கலன்கள் சோதனை செய்யப்படுகின்றன. நாளாந்த துறைமுக செயற்பாடுகளிற்கு தடங்கல்கள் ஏற்படாத வகையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பரிசோதனை இயந்திர திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தினால் பல பரம்பரைக்கு டொலர் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமாகும். எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவுச் செய்வதற்காக 30000 இலட்சம் ரூபாய் நிதியை மத்திய வங்கி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
துறைமுகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில், அதன் செயற்பாடுகளில் நெருக்கடி நிலை ஏற்படாத வகையில் கொள்கலன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நெருக்கடி நிலை தோன்றாதவாறு இச்செயன்முறையினை முன்னெடுப்பது எவ்வாறு என ஆராயுமாறு துறைமுக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கொள்கலனை பரிசோதிப்பதற்காக 12 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. அதிலிருந்து 02 டொலர்கள் சுங்க திணைக்களத்திற்கு செல்கின்றது. துறைமுகத்திற்கென வரி கட்டணத்தையேனும் செலுத்தியில்லை. மிகுதியாக உள்ள 10 டொலர்களில் 04 டொலர்கள் அரசியல்வாதியொருவருக்கு செல்கின்றதென தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனூடக துறைமுகத்திற்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இக் கொடுக்கல் வாங்கல்களின் பின்னனியிலுள்ள நிறுவனம் மற்றும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

