கோவையில் வாட்ஸ் அப் குழு அமைத்து வழிப்பறி; 5 பேர் கைது; சினிமாவைப் பார்த்து கற்றுக் கொண்டதாக வாக்குமூலம்

202 0

கோவையில் வாட்ஸ் அப் குழு அமைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

திரைப்படங்களைப் பார்த்து இதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி அடிக்கடி நடப்பதாக போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனையடுத்து காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் உள்ளிட்ட சோதனைகளில் இறங்கினர்.

இந்நிலையில் சமீபத்தில் வாகன சோதனையில் சரண் என்ற நபர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் மற்றும் செல்போன்களை வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டார்.

இவருடன் மேலும் 4 இளைஞர்களும் வழிப்பறிச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. 5 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீஸாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சரண் என்ற நபர் டிப்ளமோ படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். சினிமாவைப் பார்த்து வழிப்பறி, செயின்பறிப்பு, செல்போன் திருட்டு பற்றிய நுட்பங்களை அறிந்து கொண்டதாக அவர் தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கருமத்தம்பட்டி, அன்னனூர், சத்திய மங்கலம், பவானி, ஈரோடு ஆகிய ஊர்களில் இவர் தன் வழிப்பறி கைவரிசையைக் காட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வழிப்பறியில் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

இது ஒரு புறம் என்றால் கணியூர் சுங்கச்சாவடியருகே போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் மேலும் 2 பேர் போலீஸாரிடம் சிக்கினர். இவர்கள் இருவரும் நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக இவர்களும் வாக்குமூலம் அளித்தனர். தங்களைப் போலவே ஆடம்பரமாக வாழ நினைக்கும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து வாட்ஸ் அப் குழு அமைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்கு மூலம் அளித்தனர்.

திருட்டுப் பணத்தில் காதலிகளுக்கும் செலவு செய்ததாகவும் வழிப்பறியில் இருந்து தப்பிக்க உயர்ரக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தியதாகவும் இவர்கள் மீது நடத்திய போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.