உரிய வெப்பநிலை இன்றி களஞ்சியப்படுத்தி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பால் உற்பத்தி பொருட்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டன.

யாழ்.காரைநகர் பகுதியில் உரிய வெப்ப நிலையின்றி கொண்டுசெல்லப்பட்ட பால் உற்பத்தி பொருட்களான தயிர் , யோக்கட் , சீஸ் மற்றும் யோக்கட் குடிபானம் ஆகியவற்றை அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் கைப்பற்றி இருந்தார்.
குறித்த உற்பத்தி பொருட்கள் 3 தொடக்கம் 4’c இல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட வேண்டும். ஆனால் பொது சுகாதார பரிசோதகர் பரிசோதனை செய்யும் போது , அவை 14’c க்கும் அதிகமான வெப்ப நிலையில் களஞ்சியப்படுத்தி கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.

இது குறித்த கடந்த 12ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது எதிராளி குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் கைப்பற்றப்பட்ட பால் உற்பத்தி பொருட்களை அழிக்க உத்தரவிட்டார்.

