நாட்டின் அபிவிருத்தியில் ஜனாதிபதியுடன் சகல மக்களும் கைகோர்க்க வேண்டும்- சிறிசேன

196 0

நாட்டினை அபிவிருத்தியின் பாதையில் முன்னெடுத்து செல்லும் பயணத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் நாம் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் எனக் கூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த தனது ஆட்சியில் முன்னெடுத்த வேலைத்திட்டத்தை மேலும் பலமாக இந்த ஆட்சியில் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றி கிடைத்துள்ளது.

இப்போது புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அனைவரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். நாம் எமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நாட்டினை முன்னெடுத்து செல்ல தயாராகவே உள்ளோம்.

இன்று நாட்டில் உள்ள பிரதான பிரச்சினை வறுமையாகும். வறுமையை இல்லாது ஒழித்து நாட்டினை அபிவிருத்தியடையச் செய்யும் வழிமுறைகளை கையாள வேண்டும்.

அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மாற்று வேலைத்திட்டங்களை கையாண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். இந்த வேலைத்திட்டத்தில் ஜனாதிபதிக்கு நாம் சகல விதத்திலும் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம்.

அதேபோல் இன்று நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. விஷபோதைப்பொருட்கள் குவிகின்றது. இது எமது மாணவர் சமுதாயத்தை இலக்கு வைத்து அவர்களை நாசமாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இவற்றை ஒழிக்க எனது ஆட்சியில் நான் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். அதேபோன்று இந்த அரசாங்கமும் பலமான வேலைத்திட்டங்களை உருவாக்கி போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இந்த வேலைத்திட்டத்தை ஜனாதிபதியோ , பிரதமரோ அல்லது அமைச்சரவையோ தனியாக செய்து முடிக்க முடிந்த வேலைத்திட்டம் அல்ல.

நாட்டில் சகல தரப்பினரும் இதில் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அணைத்து மக்களும் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும்.

இன்று நாட்டில் 12 இலட்சத்துக்கும் அதிகமான அரச சேவையாளர்கள் உள்ளனர். இவர்கள் குறிப்பாக இந்த வேலைத்திட்டத்தில் கைகொடுக்க வேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழ் புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் அரச அதிகாரிகளுக்கே அதிக அளவிலான பொறுப்புக்கள் உள்ளது. நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றார்.