வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

220 0

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உள்வாங்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கையில் மூன்றுமடங்கு அதிகமாக தற்போது சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தினால் நீதிமன்றங்களை அமைக்க நிதி ஒத்துக்கியளவில் சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி இருக்கவில்லை என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்க இன்று அங்கு சென்றிருந்த அவர், சிறைக்கைதிகளின் தங்குமிட வசதிகள் அவர்களின் குறைபாடுகளை கேட்றிந்ததுடன் அங்கு சேவையில் இருக்கும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார்.அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்.

வெலிக்கடை சிறைச்சாலையில் பாரிய குறைபாடுகள் இருப்பதை அதிகாரிகளுடன் கலந்துரையாடும்போது அறிந்துகொள்ள முடியுமாகியது. அதனால் வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேரில்வந்து அதனை பார்க்கவேண்டும் என்று நினைத்து இங்குவந்து கைதிகளின் தங்குமிட வசதிகள் மற்றும் அவர்களின் நலனோம்பு விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்தேன். அதிகாரிகள் தெரிவித்ததைப்போன்று பல குறைபாடுகள் இருக்கின்றன. கைதிகளின் தங்குமிடவசதிகள் போதுமானதாக இல்லை.

குறிப்பாக வெலிக்கடை சிறைச்சாலையில் உள்வாங்க முடியுமான கைதிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க மூன்றுமடங்கு கைதிகள் இங்கு சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அதனால்  கட்டிடங்கள் உடனடியாக தேவைப்படுகின்றன. அதனால் முதற்கட்டமாக கைதிகளின் தங்குமிட வசதிகளை மேற்கொள்ள 10 மில்லியன் ரூபாவை உடனடியாக ஒதுக்கி இருக்கின்றோம். அதேபோன்று சிறைச்சாலைக்குள் நீண்டகால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டம் என பிரித்து இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள இருக்கின்றோம்.

அத்துடன் கடந்த அரசாங்கம் புதிய நீதிமன்றங்களை ஆரம்பிப்பதற்கு பாரியளவில் நிதி ஒதுக்கி இருந்தது. ஆனால் சிறைச்சாலை நடவடிக்கைகள் கைதிகளின் வசதிகளை அதிகரிப்பதற்கு போதுமான நிதி ஒதுக்கி இருக்கவில்லை. அதனால் சிறைச்சாலைக்குள் மாற்றம் ஒன்று தெரியும்வகையில் எதிர்வரும் மூன்று மாதத்துக்குள் நிறைவுசெய்யும் பல வேலைத்திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள இருக்கின்றோம்.

குறிப்பாக சிறைச்சாலை பூராகவும் கண்காணிக்கும்வகையில் சீ.சீ.டிவி கமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலையை இந்த இடத்தில் இருந்து மாற்றி கொழும்புக்கு வெளியில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நகரப்பிரதேசத்தில் சிறைச்சாலை இருப்பது பொருத்தமில்லை. தற்போது ஹோமாக பிரதேசத்தில் இதற்கு தேவையான காணி பார்த்திருக்கின்றோம். விரைவில் அதுதொடர்பான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்

அதேபோன்று சில சிறைக்கைதிகள் நீண்டகாலமாக இங்கு தங்கி இருப்பதாகவும் அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைந்து மீண்டும் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைக்கைதிகளுடன் கலந்துரையாடும்போது அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.

இதுதொடர்பாக நாங்கள் எதிர்காலத்தில் அவதானம் செலுத்த இருக்கின்றோம். நீண்ட காலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பவர்களின் குற்றத்தின் தன்மை தொடர்பாக ஆராய்ந்து அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்தால் அவர்களை விடுவிக்கும் நடைமுறையொன்றை மேற்கொள்ளவேண்டும்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. அதனால் இதுதொடர்பாக சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.

அத்துடன் சிறைச்சாலையில் தடுப்பக்காவலில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களாகும்.

அவர்களுக்கெதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டால் இடப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வுகிடைக்கும். அதற்கான நடவடிக்கைகளை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.என்றார்.