‘மகேந்திரனுக்கு எதிரான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன’!

49 0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் தொடர்பாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணை முறிகள் விற்பனையில் 10.058 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்கு தொடரப்பட்டதுடன், பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த செப்டம்பரில் அர்ஜுன மகேந்திரனை ஒப்படைப்பதற்கான 21,000 பக்கங்களை கொண்ட ஆவணத்தில் கையெழுத்திட்டு சிங்கப்பூர் அரசிடம் ஒப்படைக்க அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.