ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகச் சந்திப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

227 0
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்ட இருவரை அழைத்து வந்து ஜனாதிபதி தேர்தல் அண்மித்த பகுதியில் நடத்திய ஊடகச் சந்திப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி குறிப்பிட்ட இருவரையும் அழைத்து வந்து நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல் சம்பவங்கள் மற்றும் காணாமல்போக செய்தமை போன்ற சர்ச்சைக்குரிய தகவல்களை முன்னாள் அமைச்சர் வெளியிட்டதாக கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

டக்லஸ் பெர்ணான்டோ மற்றும் சஞ்சய மதநாயக்க ஆகிய இருவராலும் நடத்தப்பட்ட அந்த ஊடக சந்திப்பு சம்பந்தமான மேலதிக விசாரணைகளை நடத்த அந்த ஊடக சந்திப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட முழுமையான கட்சிகளை பரிசோதிக்க வேண்டியது அவசியம் எனவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, குறித்த ஊடகச் சந்திப்பு தொடர்பான தயாரிப்பு பணிகளுக்கு உட்படாத அனைத்து காட்சிகளையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் வழங்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தியதாக அததெரண செய்தியாளர் கூறினார்.

கங்கெடவிலகே குமுது பிரதீப் சஞ்சிவ பெரேரா செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்தாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.