வெள்ளை வான் கடத்தல் குறித்து தகவல் வெளியிட்டவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

259 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த நபர் தொடர்பாகவும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் கடந்த நவம்பர் மாதம் 10 திகதி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது வெள்ளை வான் சாரதியென தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட நபர் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோட்டாபய ராஜபக்ஷவே என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டதாகவும் இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வான் ஒன்றின் சாரதியாக தான் பணியாற்றியதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.