ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் ஆராய இணக்கம்

290 0

இலங்கையும் சீனாவும் தங்களின் நீண்டகால நட்புறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் ஆராய்வதற்கு இணங்கியுள்ளன.

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராயப்பட்டதாகவும் இரு தரப்பும் இது குறித்து கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இணங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கம் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து விருப்பம் வெளியிட்டுள்ளது.

இலங்கையுடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்த சீனாவின் விருப்பத்தை விசேட பிரதிநிதி வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளும் கைச்சாத்திட்டு முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்களிற்கு புத்துயுர் கொடுப்பதற்கும் இரு தரப்பும் இணங்கியுள்ளன.