புதிய ஜனாதிபதி பதவியேற்ற கையோடு பொது மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் வரிச் சுமைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொருட்கள், சேவைகளின் விலைவாசிகள் கணிசமான அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த பொதுத் தேர்தல் வரையான சுமார் மூன்று மாத காலப்பகுதிக்கு அரசு இவ்வாறான மேலும் சலுகைகளை வழங்கலாம் என்றும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெற்றி பெறும் மத்திய அரசால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று அல்லது நாளை முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவந்து புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனது அக்கிராசன உரையில் புதிய அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர்கள் பதவி விலகியதை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்று அவர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
தற்போதைய பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. பாராளுமன்றம் நாளை மறுதினம் 3 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ள நிலையில் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டு வரப்படும் திகதி மற்றும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் திகதி, நேரம் என்பன வர்த்தமானி ஊடாக வெளியிடப்படும்.
மேலும் 19 ஆம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைப்பெறும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு அரச செலவினங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்று கடந்த அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில் மார்ச் மாதம் தொடக்கம் அடுத்த வரவூ செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள காலப்பகுதிவரையான காலத்திற்கு மற்றுமொரு இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

