பாடசாலை மாணவர்களுக்கான சுரக் ஷா காப்புறுதித்திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சுரக் ஷா காப்புறுதி திட்டம் புதிய அரசாங்கத்தினால் இரத்து செய்யப் பட்டுள்ளாதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியதையடுத்து கல்வி அமைச்சு இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வேலைத்திட்டங்களில் மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட சுரக் ஷா காப்புறுதித்திட்டம் மிகவும் நன்மை பயக்கக்கூடிய திட்டமாகும். கல்விஅமைச்சர் என்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தியதை அடுத்து திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பாடசாலை மாணவர்களுக்கு அதன் பலனை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொறுப்புடன் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காது பாட சாலை மாணவர்களுக்கான இந்த காப்புறுதி திட்டத்தை முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சினால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

