தமிழ் அரசியற்பலத்தை சுழியத்திற்கு கொண்டுவந்த சிறிலங்காவின் அதிபர் தேர்தல்! – கோபி இரத்தினம்

425 0

இவ்வாரம் கோத்தபாய இராஜபக்சவின் வெற்றி அறிவிப்புடன் ஆரம்பித்தது. தொடர்ந்து வந்த நாட்கள் அவரது பதவியேற்பு, இரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல், பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த இராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை என அரசியல் நகர்வுகள் நிறைந்தாகக் கழிந்தன. இவ்விடத்தில் தமிழ் அரசியல் எங்கு நிற்கிறது என்பது பற்றியே இக்கட்டுரை கவனம் செலுத்துகிறது.

இம்முறை சிறிலங்காவின் அதிபர் தேர்தலானது கோத்தபாய இராஜபக்ச என்ற ஒற்றை வேட்பாளரை மையப்படுத்தியாக அமைந்திருக்கிறது என்பதனையும் அவருக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதனையும் எனது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். கோத்தாபாய வெற்றிபெறுவது உறுதியான நிலையில், அவரை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் மேற்குலகமும், இந்தியாவும் அவர்களது மூலோபாய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள தெரிவுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தமிழ் வாக்காளர்கள் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டு, இப்போது செய்வதறியாது தவித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது .

தேர்தல் முடிவுகள் வெளிவந்தன் பின்னர், நாமல் இராஜபக்ச தெரிவித்த ஒரு கருத்து சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. “இலங்கை அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி ஒரு தீர்க்கமான காரணியாக இல்லை என்று நாட்டின் குடிமக்கள் தெளிவான செய்தியை அளித்துள்ளனர்” என்பதாக அவரது அக்கருத்து அமைந்திருந்தது. கோத்தாபாய இராஜபக்ச தனது பதவியேற்பு வைபவத்தில் தான் தனித்து சிங்களபௌத்தர்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றிப்பெற்றேன் எனக் குறிப்பிட்டதும் நாமலின் கருத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகளை வைத்து உருவாக்கப்பட்ட  வரைபடங்களைப் பார்க்கையில் மேற்குறித்த கருத்துகளை மறுதலிக்க முடியாதுள்ளது.

தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள தேர்தல் தொகுதிகளில் சஜித் பிரேமதாச 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சிங்கள வேட்பாளருக்கு இவ்வாறு தமிழ் மக்கள் வாக்களித்தகைக்கு கோத்தாபாய மீதான அச்சமே காரணமாக அமைந்தது. இனவழிப்பு யுத்தத்தை முன்னின்று நடத்தியவர், பல்வேறு மீறல் சம்பவங்களில் நேரடியாகக் தொடர்பு கொண்டவர் என்ற வகையில் அவர் மீது தமிழ்மக்கள் அச்சங் கொள்வதில் நியாயமுண்டு. ஆனால் அவ்வச்சத்தைப் பயன்படுத்தி, அவர்களை சஜித்திற்கு வாக்களிக்கச் செய்து சிறிலங்காவின் ஒற்றையாட்சியை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் காட்டுவதில்
சிறிலங்காவின் அதிகார மையம் வெற்றிகண்டிருக்கிறது.

பெரிய பிசாசு எனக் காண்பிக்கப்பட்ட கோத்தாபாயவை தோற்கடிக்கக்கூடியவர் என குறிகாட்டப்பட்ட சஜித் பிரமதாசவிற்கு தமிழ்மக்கள் பெருமளவில் வாக்களித்தார்கள். தேர்தலைப் புறக்கணிப்பது கோத்தாபாயவின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும் என அச்சப்பட்டதனால் அவ்வாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை உதாசீனம் செய்தார்கள். இத்தனைக்கும் மத்தியில் கோத்தாபாய இராஜபக்ச, அடுத்த இடத்தில் நின்ற சஜித்தைக்க காட்டிலும் 1.5 மில்லியன் வாக்குகளை அதிகப்படியாகப் பெற்று வெற்றியீட்டினார். முன்னணியில் நின்ற இருவரும் முதற்சுற்றில் ஐம்பது விழுக்காடு வாக்ககளைப் பெற மாட்டார்கள் என்று சிலர் கூறிய ஆருடங்களும் பொய்த்துப்போனது.

தேர்தல் முடிவுகள் பற்றி சென்னையிலிருந்து வெளியாகும் ‘த இந்து’ பத்திரிகைக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வழங்கிய செவ்வியில், தமது கோரிக்கையை ஏற்று, பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பரவலாகத்திற்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதுபோன்று தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரியவர்களையும், தன்னை தமிழ்ப் பொது வேட்பாளர் எனக் கூறி தேர்தலில் நின்றவரையும் இனவாதிகள் எனக்குறிப்பிட்டு, அவர்களைத் தமிழர்கள் புறக்கணித்துவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபாய மீதான அச்சத்தின் காரணமாகவே தமிழ்மக்ள் சஜித்திற்கு வாக்களித்தார்கள் என்ற உண்மையை அவர் மறைத்து சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று செவ்வி வழங்கியிருந்தார்.
சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலைக்காட்டிலும், ஜனாதிபதித் தேர்தலிலேயே இலங்கைத் தீவில் வாழும் மற்றைய தேசிய இனங்கள் தமது வாக்குபலத்தைப் பயன்படுத்த முடியும். அதுவும் இரண்டு பெரும் சிங்களக் கட்சிகளுடையே பலமானபோட்டி நிலவுகின்ற நிலையிலேயே இவ்வாக்குப் பலம் தேவையானதாக இருக்கும். ஏற்கனவே 2010ம் ஆண்டுத் தேர்தலில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், தம்மை king makers எனக் கூறிவந்த தமிழரசுக்கட்சியும் அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள இரு கட்சிகளும் தமிழ் மக்களை ஏமாற்றி, தமிழ் மக்களுக்கு எந்த உறுதிமொழியும் வழங்காத சஜித்திற்கு வாக்குச் சேர்த்தன

நிலமையை சற்றுக் கூர்ந்து அவதானித்தால், தமிழ் மக்கள் தேர்தலில் பெருமளவில் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்துள்ள நிலையிலும், அவர்கள் அச்சப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றிருக்கிறார். அதே சமயத்தில், சஜித்துக்கு வழங்கிய வாக்குகளை முன்வைத்து , சிறிலங்காவின் ஒற்றையாட்சியை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளாதாக வியாக்கியானப் படுத்துவதற்கும் இது வழிவகுத்துள்ளது. இதற்கு மாறாக, தமிழ்த் தேசிய முன்னணியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் பெருமளவில் தேர்தலைப் புறக்கணித்திருந்தால், சிறிலங்காவின்ஆட்சிபீடத்தில் அவர்களை நம்பிக்கையற்று இருப்பதனை வெளிப்படுத்தியிருக்க
முடியும். கிடைத்த ஒரு அரிய வாய்ப்பினையும், கோத்தாபாய என்ற பிசாசைக் காட்டி
கூட்டமைப்பு வீணடித்திருக்கிறது.

மகத்தான அர்ப்பணிப்புகளின் மூலம் படைவலுச் சமநிலையை நிலைநாட்டி, 2002ம் ஆண்டு சிறிலங்காப் பிரதமருடன் சரிநிகர் சமானமாய் புரிந்துணர்வு ஒப்பந்ததைத்தைக் கைச்சாத்திட்டது அன்றைய தமிழர் தலைமை. இது நடந்து 17 வருடங்களின் பின்னர், யாருமே சீண்டாத நாதியற்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது தம்மை தமிழ் மக்களின் தலைமை எனக் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இவ்வாறான நிலமை எதிர்பாரதவிதமாக உருவானது அல்ல.

நன்கு திட்டமிட்ட முறையில் தமிழ்மக்களின் அரசியற் பலம் சுளியத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிச் சக்திகளின் உதவியுடன் முன்னெடுக்கபடும் சிங்களத்தின் இவ்வேலைத்திட்டத்தினை நிறைவேற்றவே கூட்டமைப்பிலிருந்து தமிழ்த்தேசியவாதிகள் வெளியேற்றப்பட்டனர், சுமந்திரன் போன்றவர்கள் களமிறக்கப்பட்டார்கள்.

இந்நிலையை சீர்செய்வதாயின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்தி அத்தலைமையின் வழிநடத்தலை ஏற்றுத் தமிழ்மக்கள் மாற்று வழியில் பயணிக்க முன்வரவேண்டும். அவ்வாறில்லாவிடில் இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனம் அரசியல் முக்கியத்துமற்ற சிறுபான்மையினராக மாற்றப்படுவதனை தடுத்து நிறுத்துவது இயலாததாகிவிடும்.