ஆளுநர்களை பதவி விலகுமாறு வேண்டுகோள் !

214 0

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம்உத்தரவு விடுத்துள்ளத. நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து ஆளுனர்களுக்கும் பதவி விலகுமாறு அறிவுறுத்திய உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெளிவுபடுத்துகையில்,

13 ஆவது அரசியலமைப்பு திருத்த்தின் படி ஜனாதிபதி தனது விருப்புக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப ஆளுனர்களை நியமிப்பார். ஆளுனர்களின் பதவி காலம் ஐந்து வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களை நியமித்த ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் போது குறித்த ஆளுனர்களும் இயல்பாகவே பதவி விலகியவர்களாகக் கருதப்படுவர்.

எனினும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டவுடனேயே நாம் பதவி விலகினால் அவரை நாம் புறக்கணிப்பதைப் போன்றாகிவிடும். எனவே தான் பதவி விலகுவது தொடர்பில் ஆளுனர்கள் யாரும் தீர்மானமெதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் எம் அனைவருக்கும் பதவி விலகுமாறு கோரி உத்தியோகபூர்வ கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கமைய நான் என்னுடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

ஏனைய மாகாண ஆளுனர்கள் சிலர் இது தொடர்பில் கலந்துரையாடினர். தொடர்ந்து ஒன்பது மாகாணங்களுக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் புதிய ஆளுனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மத்திய மாகாண கீர்த்தி தென்னகோன், கிழக்கு ஆளுனர் ஷான் விஜேலால் டி சில்வா, வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், வடமேல் மாகாண ஆளுனர் பேஷால ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுனர் தம்ம திஸாநாயக்க, தென் மாகாண ஆளுனர் ஹேமால் குணசேகர, ஊவா ஆளுனர் மைத்திரி குணரத்தின மற்றும் மேல் மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மில் ஆகியோருக்கே இவ்வாறு பதவி விலகுமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.