சஜித் தலைமையில் ஊழல் மோசடிக்காரர்களற்ற புதிய அணி?

260 0

சஜித் பிரேமதாசவின் தலைமையில் எவ்வித ஊழல் மோசடிகளுமற்ற புதியவர்களை இணைத்துக்கொண்டு, முன்நோக்கிச் செல்வதையே கட்சியின் ஆதரவாளர்கள் விரும்புகின்றார்கள். அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 4 மாதகாலம் போதுமானதாகும். அதன்பின்னர் புதிய உத்வேகத்துடன் பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியும் என அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரங்களின் போது சஜித் பிரேமதாச பெருமளவில் வறிய மக்கள் தொடர்பிலும், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்துமே பேசினார். ஆனால் தற்போது வறிய மக்கள் உண்மையில் வறிய மக்கள் இல்லையான என்ற கேள்வி எழுகின்றது. அம்மக்களின் மனதில் வறுமையையும் மிஞ்சிய காரணியொன்றை கோத்தபாய ராஜபக்ஷ தரப்பினர் புகுத்தியிருந்தனர்.

‘எமக்கென நாடொன்று இருக்கவேண்டும்’ என்று கூறி, இனவாதத்தை ஏற்படுத்தி, அம்மக்களின் உண்மையான பிரச்சினையை மறக்கடித்து மாயையொன்றைத் தோற்றுவித்தார்கள். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதால் ஒருபோதும் நாடு இல்லாமல் போகாது. மாறாக அவர் நாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, வறுமையை ஒழிப்பதற்கு வழிதேடியிருப்பார். ஆனால் வறிய மக்கள் தமது உண்மையான நீண்டகாலப் பிரச்சினையை மறந்து, கோத்தபாய ராஜபக்ஷ தரப்பு தோற்றுவித்த விடயத்தைக் கருத்திற்கொண்டு அவருடன் இணைந்திருக்கிறார்கள்.

நாட்டின் சிங்கள பௌத்த மக்களும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் எமது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சில தவறான தீர்மானங்களினால் அவர்கள் எம்மிடமிருந்து விலகியிருக்கின்றார்கள். உண்மையில் அதற்கு சஜித் பிரேமதாச எவ்விதத்திலும் பொறுப்பானவரல்ல.

ஆனால் அவ்விடயமும் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்று கருதுகின்றேன். எமது கடந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகளும், எம்மை பௌத்த விரோதிகள் போன்று கோத்தபாய ராஜபக்ஷ தரப்பு சித்தரித்தமையும் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு பிரதான காரணமாகும்.

சஜித் பிரேமதாச அவருடைய தேர்தல் பிரசாரத்தில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் எவ்விதத்திலும் குற்றஞ்சாட்டாமல், மிகவும் கௌரவமாகவே செயற்பட்டார். அவரை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதிலும் பெரும் இழுத்தடிப்புச் செய்யப்பட்டது.

அவர் அதிகாரத்தின் மீது பேராசை கொண்டவரல்ல. ஆனால் அவருக்கு இளமையும், துடிப்பும், சக்தியும் இருக்கின்ற காலத்தில் தமது தலைவராக ஏற்று மக்கள் பொறுப்பைக் கையளிக்காத நிலையில், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நன்கு சிந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சஜித் பிரேமதாச உள்ளதாவும் அவர் கூறினார்.