நிகவெரட்டிய – கொபேயிகனை பகுதியில் போலி நாணயத்தாளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொபேயிகளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் குளிர்ப்பான விற்பனை நிலையமொன்றுக்குச் சென்று போலி நாணயத்தாளை கொடுத்து குளிர்ப்பானத்தை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளனர். பின்னர் குறித்த விற்பனை நிலையத்தின் முகாமையாளர் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹானேகம பகுதியைச் சேர்ந்த 40, 41 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

