ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் பதவி விலகப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கை யில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு தேர்தலை நடத்துவதற்கு நான் தலைமை தாங்கப்போவதில்லை என்ற முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்னரே எடுத்துள்ளேன்.
எனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டு, அது தற்போது மேசையில் தயாராகவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவே முனைப்புக்காட்டப்பட்டது. அது சாத்தியப்படாது போனால் பதவி விலகத் தீர்மானித்திருந்தேன். ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், இதனை நடத்திவிட்டு பதவி விலகத் தீர்மானித்துள்ளேன்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில் கூட சில அரசியல் தரப்புகள், மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த விடயத்தில் என்னால் உடன்பட முடியாதிருப்பதுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதை விட பதவி விலகுவதையே விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

