பிரித்தானிய எலிஸபெத் மகாராணியாரின் பக்கிங்ஹாம் மாளிகையும் அதனுடன் இணைந்த கட்டிடங்களும் பெருந்தொகையான பணியாளர்களால் எப்போதும் கண்ணைக் கவரும் வகையில் சுத்தமாக பராமரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததாகும்.

இந்நிலையில் எலிஸபெத் மகாராணியாருக்கு சாதாரண மக்கள் எதிர்கொள்வதைப் போன்ற எலித் தொல்லை பிரச்சினை எதுவும் இருக்காது என்று எவராவது நினைத்தால் அது தவறு என்பதை அண்மையில் இடம்பெற்ற சம்பவம் நிரூபித்துள்ளது.

மகாராணியாருடன் சந்திப்பை மேற்கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பக்கிங்ஹாம் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலையை பரிசோதிக்க அண்மையில் சென்ற பரிசோதகர்கள் அங்கு எலிப் புழுக்கைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அந்த சிற்றுண்டிச்சாலைக்கு எலிகளை ஒழிப்பதற்கு சுகாதார நிபுணர்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டதுடன் அங்கு பணியாற்றுபவர்களுக்கு எலிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி வழங்குவதற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மகாராணியாரை சந்திப்பதற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அந்த சிற்றுண்டிச்சாலையில் அமர்ந்திருந்து தேநீர் அருந்தி சிற்றுண்டிகளை உண்பதற்கு அனுமதிக் கட்டணமாக ஒருவருக்கு 49 ஸ்ரேலிங் பவுண் வீதம் அறவிடப்படுகிறது.

