அயோத்தி தீர்ப்பு: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

307 0

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவதை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

விசாரணை முடிவடைந்த நிலையில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் இன்று (நவ.9) காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி உத்தரபிர தேசம் உட்பட நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருமங்கலம் டிஎஸ்பி திருமலை குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் 30 போலீஸார் விமான நிலைய வெளி வளாகம், செக்போஸ்ட், கார் பார்க்கிங் மற்றும் உணவகம் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சந்தேகத்திற்குரிய வாகனங்களை வெடிகுண்டு தடுப்பு போலீஸார் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

இதேபோல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர்கள் விமான நிலையம் மற்றும் ஓடுபாதை சுற்றுப்புறங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று அயோத்தி தீர்ப்பு வருவதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க இத்தகைய தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.