அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேற்கொள்வதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பான இறுதி முடிவுக்கு வருவதற்கு முன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதனை மதிப்பீடு செய்யும் என்றும் அவர் கூறினார்.
இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் நிர்வாகத்தை தமது கட்சி பொறுப்புடன் ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பொறுப்புடன் கையாளப்படும் என்றும், ஒப்பந்தத்தை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அத்தோடு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர், அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

