தேயிலை உற்பத்தியை மேம்படுத்தவும் கம்பளைப் பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளைத் திறக்கவும் ஆவன செய்வதோடு தோட்டத் தொழிலாளர்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறினார்.
கம்பளை தனியார் பஸ் நிலையத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், நான் ஜனாதிபதியானதும் தேயிலைத் தொழிற்துறையை முன்னேற்றமடையச் செய்வதோடு தற்பொழுது மூடப்பட்டிருக்கும் தேயிலைத் தொழிற்சாலைகளைத் திறப்பதற்கும் ஆவன செய்வேன்.
காலம் காலமாக தொழிலாளர்களாகவே வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பேன். இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 750 ரூபா அல்ல 1500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கையை மேற்கொள்வேன் என்பதை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.
எமது நாட்டில் அனைத்து தொழில்துறைகளுக்கும் அரச திணைக்களங்கள் உள்ளன. ஆனால் கோப்பி, மிளகு, கராம்பு உட்பட வாசனைத் திரவியங்களின் செய்கையாளர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் உள்ளது. நான் ஜனாதிபதியானதும் மேற்குறிப்பிட்ட துறைக்கென தனியான ஒரு திணைக்களத்தை அமைத்துக் கொடுத்து அத்தொழில் துறையையும் முன்னேற்றமடையச் செய்வேன்.
பால் உற்பத்தியாளர்களும் தற்பொழுது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளையும் தீர்த்து நாட்டில் பால் உற்பத்தியை தன்னிறைவு அடையச் செய்வேன். எனது தந்தையின் காலத்திலேயே பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஆனால் அதனை எதிரணியினரே இல்லாமல் ஆக்கினர். நான் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை அமுல்படுத்துவேன். கண்டிக்கு முந்திய இராஜதானிய நகரான கம்பளை நகரத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியமைப்பேன் என்றார்.

