வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து பகிர்ந்த சம்பவம் தொடர்பில் கைதானோருக்கு பிணை

320 0

தபால்மூல வாக்குகளைப் பதிவுசெய்யும்போது  கைத்தொலைபேசியில் அதைப்படம்  பிடித்து சமூக  வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து கொண்ட பல  சம்பவங்கள்   இடம் பெற்றிருக்கின்றன.

இது தொடர்பில் பொலிசார் விசேட  விசாரணைகளை   ஆரம்பித்திருப்பதாக பொலிஸ்  ஊடகப்பேச்சாளர்  சிரேஷ்ட  பொலிஸ்  அத்தியட்சர்  ருவான்  குணசேகர தெரிவித்தார்.

ஏற்கனவே தபால்மூல  வாக்களிப்பின்போது   தமது  வாக்குச்சீட்டுகளை கையடக்கதொலைபேசியில் புகைப்படம்  எடுத்தமை தொடர்பில் கைது  செய்யப்பட்ட  அரச ஊழியர்கள்  மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

ஜனாதிபதி  தேர்தலுக்கான  தபால்மூல  வாக்களிபு  ஒக்டோபர்  31   மற்றும் நவம்பர்  01  ஆம்  திகதிகளில்  இடம்பெற்றது. அவ்வேளையில்  அவர்கள்  தமது  கைத்தொலைபேசியில் வாக்குச்சீட்டை  புகைப்படம் எடுத்த  குற்றச்சாட்டின்  பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கேக்கிராவ , கட்டுகஸ்தொட  மற்றும்   கம்பளை  ஆகிய  பொலிஸ்  பிரிவுகளிலேயே  இந்த சம்பவங்கள்  பதிவாகியிருந்தன.  இரண்டு  ஆசிரியர்களும் , பாடசாலை  பாதுகாவலர்  ஒருவருமே  இதன்போது கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர்கள்  மூவரும் நீதவான் நீதிமன்றங்களில்  ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து நேற்று சனிக்கிழமை  பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளதாக   பொலிசார்  மேலும்  தெரிவித்தனர்.

கெக்கிராவ

கெக்கிரிராவ  மாகாணகல்விப்பணிமனையில்  இடம்பெற்ற  தபால்  மூல வாக்களிப்பின்போது வாக்குச்சீட்டை  புகைப்படம்  எடுத்தமை  தொடர்பில்  கைது  செய்யப்பட்ட  ஆசிரியர்  நேற்று சனிக்கிழமை  பொலிஸ் பிணையில்  விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும்  அவரை  எதிர்வரும்  04  ஆம்  திகதி  கெக்கிரிராவை  நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜராகுமாறும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தொட  

கட்டுகஸ்தொட  மாகாணக்கல்விப்பணிமனையில்  இடம் பெற்ற  தபால்  மூலவாக்கெடுப்பின்  போது  கைது புகைப்படம்  எடுத்தமை  தொடர்பில்  கைது  செய்யப்பட்ட  அக்குரண பகுதியை  சேர்ந்த  பாடசாலை  ஆசிரியர் நேற்று  சனிக்கிழமை   இரண்டு இலட்சம்  ருபாய்  சரீரபிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.

கம்பளை  

கம்பளை  மாகாண கல்விப்பணிமனையில்  இடம்  பெற்ற  தபால்  வாக்களிப்பின்  போது   தனது வாக்குச்சீட்டில் அடையாளம்  இட்ட  பின்னர்  புகைப்படம்  எடுக்க  முயற்சித்த  சம்பவம் தொடர்பில் நபர்  ஒருவர்  கைது செய்யப்பட்டிருந்தார்.

கம்பளை  குருந்துவத்தையைச்சேர்ந்த  பாடசாலையின்  காவலாளி  ஒருவரே  இதன்  போது  கைது  செய்யப்பட்டதோடு ,  கம்பளை  நீதவான்  நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு இலட்சம்  ரூபாய்  சரீர    பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் முறைப்பாடுகள்  

ஜனாதிபதி தேர்தல்  தொடர்பில்   நேற்று  சனிக்கிழமை  வரை  மொத்தமாக  36 முறைப்பாடுகள்  கிடைத்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். குறிப்பாக தேர்தல்  காரியாலயங்களிலுள்ள பதாகைகளை  சேதப்படுத்துதலுடன்  தொடர்புடைய   குற்றச்சாட்டுக்கள்  இதில்  உள்ளடங்குகின்றன.

அதேவேளை   56  தேர்தல் சட்ட  மீறல்கள் பதிவாகியுள்ளதாகவும்   தேர்தல் சட்டத்தை பீறி   பதாகைகளை  காட்சிப்படுத்துதல் ஸ்டிக்கர் ட்டுதல்  ஆகியன  தொடர்பிலேயே  அந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில்    தேர்தல்  சட்டமீறல்கள்  தொடர்பில்  கண்காணிப்பதற்காக  பொலிஸ்  தலைமையகத்தில்  ஸ்தாபிக்கப்பட்ட பிரிவிற்கு  மாத்திரம்  92  முறைப்பாடுகள்  கிடைத்துள்ளன.

அதற்கமைய  தங்களுக்கு  கிடைக்கும்  முறைப்பாடுகள்  மற்றும் சட்ட விதி  மீறல்கள்  தொடர்பில்  சட்ட  திட்டங்களுக்கமைய  விசாரணைகள்  மேற்கொள்ளப்படுவதாகவம் குறித்த  நபர்களுக்கு  எதிராக  வளக்கு  தாக்கல்  செய்வதற்கான  நடவடிக்கைகள்  எடுக்கப்படுவதாகவும் பொலிசார்  மேலும்  தெரிவித்தனர்.

தேர்தல்கள்  ஆணைக்குழு  முறைப்பாடுகள்  

தேர்தல்கள்  ஆணைக்குழுவிற்கு  இது  வரையில்   ஜனாதிபதி  தேர்தல்  தொடர்பில்  2540  முறைப்பாடுகள்  கிடைத்துள்ளது.

அதிகளவிலான  முறைப்பாடுகள்  தேர்தல்சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே  பதிவாகியுள்ளது. மாவட்ட  தேர்தல் முறைப்பாட்டு  முகாமைத்துவ  நிலையத்திற்கே  அதிகளவில்  கிடைத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை  பிற்பகல்  4  மணி  தொடக்கம் வெள்ளிக்கிழமை  பிற்பகல்  4  மணிவரையான  24  மணித்தியாலங்களுக்குள்  தேர்தல் வன்முறைகள்  தொடர்பில்  147  முறைப்பாடுகள்  கிடைத்துள்ளன.

பெப்ரல் அமைப்பு   

பெப்ரல்  அமைப்பிற்கு  மாத்திரம்   நேற்று  சனிக்கிழமை  வரையில் 353  முறைப்பாடுகள்  கிடைத்துள்ளன.  அவற்றில் கடந்த  வெள்ளிக்கிழமை  மாலை 4.30  முதல்  சனிக்கிழமை 4.30  மணிவரையான  24  மணித்தியாலங்களக்குள்    தேர்தல்  சட்டங்களை  மீறியமை தொடர்பில் 327  முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.  அத்துடன்.   வன்முறை  சம்பவங்கள்  28 உம்  ,  தேர்தல் சட்டமீறல்கள்  32 உம்   பதிவாகியுள்ள  அதேவேளை  , 12 பேர் வரையில் வைத்திய  சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கால எல்லை

கடந்த   31  மற்றும்  01   ஆம்  திகதிகளில்   அரச ஊழியர்களக்கான  ஜனாதிபதி தேர்தலுக்கான    தபால்  மூலவாக்களிப்பு  இடம் பெற்றது.அதேபோல்   தேர்தல்கள்  செயலகம்  மற்றும்  பொலிஸ்  ,  முப்படை  உத்தியோகஸ்தர்கள்  தபால்  மூலம் வாக்களிப்பதற்காக  எதிர்வரும்நவம்பர்  04   ஆம்  திகதியும்   குறித்த  பாதுகாப்பு  படை  முகாம்களில்  குறித்த  தினத்தில்  வாக்களிக்   தவறுவோருக்கு   எதிர்வரும்  7ஆம்  திகதியும்  மாவட்ட  தேர்தல்  அலுவலகங்களில் வாக்களிக்க  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.