சஜித் வெற்றிக் கோட்டைத் தொடுவாரா?

359 0

சஜித் பிரேமதாஸவின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது; தமிழ் மக்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்கிறார்களா?” என்ற கேள்வியை, மேற்கு நாடொன்றின் தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரியொருவர், சில வாரங்களுக்கு முன்னர், இந்தப் பத்தியாளரிடம் கேட்டார்.   

அரசியல் உரையாடல்களில், அதுவும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், இந்தக் கேள்வி இயல்பானது. ஆனால், கேள்விக்கான பதிலை, ஓரளவுக்கு ஆழமாக நோக்கினால், இம்முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கப்போகும் தரப்புகளையும் காரணிகளையும் இனங்காண முடியும்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், ஒருபோதும் இல்லாத வகையில், தொடர்ச்சியாக நான்காவது முறையாக, ராஜபக்‌ஷக்கள் எதிர் இன்னொரு வேட்பாளர் என்கிற போட்டித்தன்மை காணப்படுகின்றது.

2005ஆம் ஆண்டில், ஜனாதிபதித் தேர்தலில், புலிகளின் தேர்தல் பகிஷ்கரிப்பு ராஜபக்‌ஷக்களுக்கு முதல் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 2010ஆம் ஆண்டுத் தேர்தலில், புலிகளின் அழிவே தேர்தல் வெற்றியை அவர்களுக்கு இலகுவாக்கியது. 2015இல், ராஜபக்‌ஷக்கள் கொஞ்சமும் சிந்திக்காத நகர்வொன்றை, எதிர்க்கட்சிகள் மேற்கொண்டபோது, தோற்க வேண்டி வந்தது.

ஆனால், இம்முறை ராஜபக்‌ஷக்கள் பக்கத்திலும், அவர்களின் பிரதான எதிரியாகக் கொள்ளப்படுகின்ற சஜித் பிரேமதாஸ பக்கத்திலும் தளம்பல் நிலையே காணப்படுகின்றது. பெரியளவில் ஒரு பக்கத்துக்கான வெற்றி வாய்ப்புகளைக் களம் காட்டவில்லை.

‘கோட்டா எதிர் சஜித்’ என்கிற போட்டித் தன்மை, கடந்த காலத்து ஜனாதிபதித் தேர்தல்களோடு ஒப்பிடும்போது, மக்களிடம் எதிர்பார்ப்புக் குறைந்த ஒன்றாகக் காணப்படுகின்றது.

ராஜபக்‌ஷகளின் கடந்தகால ஆட்சி முறையை உணர்ந்திருக்கின்ற மக்களிடம், அவர்கள் குறித்த புதிய நம்பிக்கைகள் ஏதும் பெரிதாக இல்லை. அதுபோல, நல்லாட்சி அரசாங்கத்தின் செய‌ற்றிறனற்ற தன்மை, சஜித் மீதான கடந்த கால நம்பிக்கைகளைக்கூட, குறிப்பிட்டளவு குறைத்துவிட்டது.

ஏனெனில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, குறிப்பிட்டளவு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சஜித் ஜனாதிபதியானாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால், அதைக் கட்டுப்படுத்தப்போவது, ரணிலும் அவரது சகாக்களும் என்கிற உணர்நிலை தெற்கில் காணப்படுகின்றது. அது சஜித்துக்கு பெரும் பின்னடைவாகும்.

அத்தோடு, அநுர குமார திஸாநாயக்க பெறப்போகும் ஐந்து இலட்சத்துக்கு அண்மித்த வாக்குகளில் அதிகமான வாக்குகள் ராஜபக்‌ஷக்களுக்கு எதிரானவை; சஜித்துக்கு கிடைக்க வேண்டியவை. ஆனால், இம்முறை அதுவும் தடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு வகையில், இதுவும் சஜித்துக்கான பின்னடைவு.

ஆனால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் மத்தியதர வாக்குகளும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு சதவீதமுமே இறுதி வெற்றியாளரைப் பெரியளவு தீர்மானிக்கப்போகின்றன. அதை நோக்கியே, இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளும் அமைக்கப்படுகின்றன.

சஜித்தைப் பொறுத்தளவில், தெற்கில் சிறுகிராமங்களை வெற்றிகொள்வது அவ்வளவு சிரமான ஒன்றல்ல. ஆனால், பெரும் வாக்கு வங்கியான மத்தியதர மக்கள், ராஜபக்‌ஷவோடு இருக்கின்ற நிலையை, எவ்வாறு கையாள்வது என்பது தெரியாமல் திணறுகிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி- ரணில் என்கிற இரட்டை முகங்களை முன்னிறுத்தியே, ராஜபக்‌ஷக்களைப் பொது எதிரணியினர் எதிர்கொண்டார்கள். ஆனால், இம்முறை சஜித்- ரணில் என்கிற இரட்டை முகத்தை முன்னிறுத்துவது சார்ந்த நிலை உருவாவதற்கான வாய்ப்புகளை, ரணில் தரப்பினரே தடுத்துவிட்டனர்.

மைத்திரியின் ஓகஸ்ட் 26, சதிப்புரட்சிக் காலத்தில் ரணிலோடு, சஜித் இணங்கிச் செயற்பட்ட விதமும், அரசாங்கத்தை மீட்டெடுத்த விதமும் தெற்கில் வெகுவாகப் பாராட்டப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான அதிருப்தியைத் தாண்டியும் அரசாங்கத்தை திருட முயற்சித்த ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான உணர்வலை ஏற்பட்டது.

சரியாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கின்ற நிலையில், அந்த உணர்வலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி, தேர்தலில் அறுவடை செய்திருக்க முடியும். ஆனால், ரணிலும், அவரது சகாக்களும் அதற்கான வாய்ப்புகளைச் சிதறடித்துவிட்டதாக சஜித் கருதுகிறார். வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காகவே போராட்டங்களை நடத்த வேண்டிய அளவுக்குத் தன்னை நகர்த்தி, கட்சிக்குள்ளும், ஆதரவாளர்களுக்குள்ளும் பிளவை ஏற்படுத்திவிட்டதாகவும் சஜித்தும் அவரது சகாக்களும் நினைக்கிறார்கள்.

அத்தோடு, ரணிலின் சகாக்களான ரவி கருணாநாயக்க, அகில விராஜ் போன்றவர்கள் சாக்குப்போக்குக்காக பிரசார மேடைகளில் ஏறினாலும், சஜித்துக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இன்னமும் இருக்கிறார்கள். சஜித்தின் வெற்றி, தங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் எதையும் வழங்காது என்று நினைக்கிற அவர்கள், அதனால் சஜித்தின் தோல்வியே தங்களை நிலைநிறுத்தும் என்றும் கருதுகிறார்கள்.

அதனால், குருநாகல், கொழும்பு போன்ற அதிக வாக்காளர்கள் கொண்ட பகுதிகளில், சஜித்துக்கான வாக்கு அறுவடை முயற்சியில் இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது.

இன்னொரு பக்கம், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை இணைத்துக் கொள்வது சார்ந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாத அளவுக்கான நெருக்கடியை, வேட்பாளர் தேர்வுக்கான இழுபறி ஏற்படுத்திவிட்டது. அது, தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட அதிக ஆதரவாளர்களைக் கொண்ட தலைவர்களை, ராஜபக்‌ஷக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது என்பது சஜித்தின் கோபம்.

சஜித்தின் தற்போதைய நகர்வு, மத்தியதர வாக்குகளில் பெண்களை இலக்காகக் கொண்டது. 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களாகப் பெண்களைக் கொண்ட நாட்டில், பெண்களை இலக்கு வைத்த நகர்வு என்பது நியாயமான ஒன்றே.

மத்தியதரப் பெண்களின் வாக்குகள், தனித்த வாக்குகளாக மட்டுமில்லாது, குடும்பங்களின் வாக்குகளாக மாறும் வாய்ப்புள்ளது. அதனை, நோக்கியே அவர் கடந்த சில நாள்களாக இயங்குகிறார்.

அத்தோடு, கோட்டா ஒரு தலைவருக்கு உரிய உடல்மொழியை, பிரசார மேடைகளிலோ, ஊடக சந்திப்புகளிலோ காட்டாத நிலையில், அந்த விடயத்தை எடுத்துக் கொண்டு, தன்னைச் சிறந்த தலைவராக முன்னிறுத்த, சஜித் முனைகிறார். அதற்காகவே, நேரடி விவாதமொன்றுக்கான அழைப்பை கோட்டாவை நோக்கி, சஜித் மீண்டும் மீண்டும் விடுத்து வருகிறார். ‘டுவிட்டர்’ சமூகத் தளத்தில் தொடங்கிய, விவாதத்துக்கான அழைப்பை, ஒவ்வொரு மேடைகளிலும் விடுத்துக் கொண்டிருக்கிறார். ராஜபக்‌ஷக்களைப் பொறுத்தளவில், சஜித்தின் நேரடி விவாதத்துக்கான அழைப்பு, குறிப்பிட்டளவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு கட்டம் வரையில், அதனை கண்டுகொள்ளாது கடக்க முடியும் என்று கருதிய அவர்கள், “கோட்டா, தன்னுடைய சகோதரர்களை அழைத்துக்கொண்டாவது, விவாதத்துக்கு வரலாம்” என்று சஜித் அடுத்த கட்ட அழைப்பை விடுத்ததும், அதனை எதிர்கொண்டே ஆகவேண்டிய சிக்கலைச் சந்தித்து நிற்கிறார்கள்.

தமிழ், முஸ்லிம் வாக்குகள் கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களைப் போலவே, இம்முறையும் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகவே பெருமளவு விழப்போகின்றன. ஆனால், வாக்களிப்பு சதவீதம் என்பது, கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் குறைவதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றன.

கடந்த தேர்தல் காலம் என்பது, மக்களிடம் ஒருவகையான எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதுவே, சுமார் 72 சதவீதத்துக்கும் அதிகமான வாக்களிப்புச் சதவீதத்தை வடக்கும், கிழக்கும், மலையகமும் பதிவு செய்யக் காரணமாகும்.

ஆனால், இம்முறை தேர்தல் தொடர்பிலான எதிர்பார்ப்பு என்பது, மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அதனால், வாக்களிப்பு சதவீதம் 65 சதவீதத்தைத் தாண்டுவதே பெரிய விடயமாக இருக்கப்போகின்றது.

அத்தோடு, வடக்கு- கிழக்கில் களமிறங்கியுள்ள சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்களின் நிலை என்பது, மக்களின் தேர்தல் மீதான நம்பிக்கையீனத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

அவர்கள், இருவரும் தலா பத்தாயிரம் வாக்குகளைப்பெறுவதே சாத்தியமில்லாதது. ஆனால், அவர்கள் பெறும் ஒவ்வொரு வாக்கும் ராஜபக்‌ஷக்களின் வெற்றியின் சதவீதத்தை அதிகரிக்கவே செய்யும்.
இவ்வாறான நிலை, தமிழ், முஸ்லிம் வாக்குகள் தனக்குத்தான் என்கிற சஜித்தின் எதிர்பார்ப்பில் குறிப்பிட்டளவு பின்னடைவாகவே இருக்கப்போகின்றது.

ராஜபக்‌ஷக்கள் தேர்தலை வெற்றிகொள்வதற்காக எதிர்நோக்கியிருப்பது, சிங்கள மத்தியதர வாக்குகளை மட்டும்தான். சிறுபான்மை வாக்குகள் அவர்களின் குறிக்கோளே அல்ல. ஆனால், சிறுபான்மை வாக்குகளைச் சிதறடிப்பதும், வாக்களிப்பைத் தடுப்பதும் அவர்களின் தேர்தல் கால யுத்தி. ஒவ்வொரு முறையும் அதையே, அவர்கள் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். 2005 தேர்தலில் ராஜபக்‌ஷக்கள் அனுபவித்த வெற்றி, தமிழ் மக்களின் தேர்தல் பகிஷ்கரிப்பு என்கிற விடயத்தால் கிடைத்தது. அந்த ருசியை அவர்கள் ஒவ்வொரு முறையும் அனுபவிக்கத் துடிக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் நாள்களில் சஜித்துக்கான ஆதரவை வெளியிடும். அந்த ஆதரவு நிலைப்பாடு என்பது, தமிழ் மக்களின் வாக்களிப்பை 70 சதவீதமளவுக்கு உயர்த்த உதவினாலேயே, அது சஜித்துக்கான பெரிய முன்னேற்றமாகக் கொள்ளப்படும். ஆனால், கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்காக வாக்குக் கேட்டதுபோல, பிரசாரக் கூட்டங்களை, சஜித்துக்காக நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படியான நிலையில், கோட்டாவைத் தோற்கடிப்பதற்கான உழைப்பை, சஜித் இன்னமும் வழங்க வேண்டியிருக்கும்.

புருஜோத்தமன் தங்கமயில்