இனியாவது கண்டுகொள்ளப்படுமா குழந்தைகளின் கண்டுபிடிப்புகள்?

387 0

ரோகித் கணபதி, பிரேம், பரணி… இந்த மூன்று சிறுவர்களையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்த்தேன். ஒரு கண்ணாடிப் பேழை. அதனுள்ளே ஒரு கண்ணாடிக் குழாய். அதன் கீழே ஒரு குழந்தை பொம்மை. மேலிருந்து பலூனை விட்டு, குழாய்க்குக் கீழுள்ள சிறு பொம்மையை உறிஞ்சி (வேக்யூம் கிளீனர் அடிப்படையில்) மேலே எடுத்துக்கொண்டிருந்தார்கள். பலூனுடன் ஸ்பீக்கர், கேமரா எல்லாம் பொருத்தப்பட்டிருக்கிறது. மேசையில், ‘ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டெடுத்தல்’ என்று தலைப்பிட்டு, ஒரு அட்டையில் அதை எப்படி இயக்குவது என விளக்கியிருந்தார்கள்.

காங்கேயம் சுவாமி விவேகானந்தா பள்ளி மாணவர்கள் அவர்கள். “இதை ஒரு மாதிரியா வெச்சுக்கலாம். இதை அடிப்படையா கொண்டு, சாதனங்களைச் செஞ்சா நம்மால குழந்தைகளை மீட்டெடுக்க முடியும்” என்று சொன்ன அவர்களுடைய முயற்சிகளைப் போல ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அந்த அரங்கில் நிறைந்திருந்தன. பலரும் வசதியற்ற சூழலிலிருந்து வரும் குழந்தைகள்.

இந்திய அரசின் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை’ (Department of Science & Technology) நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒரு பகுதியாகவே இத்தகைய கண்காட்சிகள் நடக்கின்றன. நம் மாநிலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநிலம் முழுக்கவுள்ள குழந்தைகளிலிருந்து சிறந்த 30 கண்டுபிடிப்புகளைத் தேர்ந்தெடுத்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு அனுப்புகிறார்கள். அவற்றைப் பார்வையிடும் விஞ்ஞானிகள், துறைசார் நிபுணர்கள் மேலதிக ஆய்வுக்கு எடுத்துச் சென்று மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில், இப்படியான கண்காட்சிகள் தொடங்கிய கடந்த 26 ஆண்டுகளில் சுமார் 780 கண்டுபிடிப்புகள் தேசிய அறிவியல் மாநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சில பெரிய கவனத்தைப் பெற்றுள்ளன. உதாரணமாக, மழைநீர் சேகரிப்பு, ஒரத்துப்பாளையம் சாயக்கழிவு நீர் மேலாண்மை போன்றவை இங்கிருந்து அரசு பெற்றுக்கொண்டவைதான். ஆனால், பெரும்பாலான ஆய்வுகள் கண்காட்சிகளோடு முடங்கிவிடுகின்றன. அவை உரிய கவனம் பெறுவதில்லை. திருப்பூர் ஈஸ்வரன் 23 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான குழந்தைகளைத் தேசிய அறிவியல் மாநாட்டுக்கு அழைத்துச் சென்றவர்.

இவரை வழிகாட்டியாகக் கொண்டு நிறைய குழந்தைகள் ‘இளம் விஞ்ஞானி’ பட்டம் பெற்றிருக்கிறார்கள். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், “பல முக்கியமான கண்டுபிடிப்புகள் கீழ் நிலையிலேயே உரிய கவனம் பெறாமல் வீணாகிவிடுகின்றன. 2014-ல் திருப்பூர் பள்ளி ஒன்றின் மாணவர்கள் நீரில்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதன் அவசியத்தையும், அதற்கான திட்டத்தையும் காட்சிப்படுத்தினர். தமிழகத்தில் 17.2% ஆழ்துளைக் கிணறுகள் அபாயகரமான இடத்தில் இருப்பதையும் சொல்லியிருந்தார்கள்.

அது மாவட்ட அளவிலேயே நிராகரிக்கப்பட்டதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்! இதுபோல பல யோசனைகள் இந்த விஷயம் தொடர்பாகவே அறிவியல் கண்காட்சிகளில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் என்பதாலேயே பல விஷயங்கள் இங்கே மலிவாகப் பார்க்கப்படும் மனநிலை உண்டு. தேசிய அளவு வரை அது நீடிக்கிறது!”

சுஜித் மரணத்துக்குப் பின் ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்டெடுக்கப் பொதுமக்களிடம் யோசனை கேட்கிறது அரசு. இதுபோல எண்ணற்ற பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகள் நம்முடைய குழந்தை விஞ்ஞானிகளாலேயே சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் என்றில்லை; ஆனால், உரிய மதிப்போடு பரிசீலிக்கலாம்தானே!

– கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.inசமஸ்