சஜித் பிரேமதாச போன்ற கொள்கையில்லாத வேட்பாளருடன் விவாதம் புரிவது கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்களுக்கு பெருத்த அவமானமாக அமையும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ஷ உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதத்தை தோற்கடித்ததுடன் கொழும்பு பல்கலைகழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் எனவும் கூறினார்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதுவரை முறையான வாக்குறுதி அல்லது கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

