அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் முன்வைக்கும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த எதிர்காலத்தில் சட்டரீதியான பிணைப்பு ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
´நம்பிக்கையின் உதயம்´´ என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் வெளியிடப்பட்டது.
இதன்போது தேரர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்திஜிவிகள், கலைஞர்கள் என பெரும்பாலானவர்கள் கலந்துக்கொண்டனர்.
பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளடங்களாக பல்வேறு துறைகளை மையப்படுத்தி இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருந்த நிலையில் இது தொடர்பான கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்து கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக ´நம்பிக்கையுடன் உதயம்´ என்ற இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க எந்தவொரு மக்கள் பிரிவின் ஊடாகவும் பிரிவினைவாதம் கட்டியெழுப்பப்படுவதற்கு இடமளிக்க போவதில்லை என கூறினார்.
அதேபோல் ஐந்து வருடங்களின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவை நிறுத்தவுள்ளதாகவும், ஜனாதிபதிகள் பொதுமக்கள் பணத்தில் வாழ்வதை நிறுத்துவதாகவும், அமைச்சரவையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளாதாகவும் அவர் மேலும் கூறினார்.

