உலக வரலாற்றில் ஹிட்லர், அஸாத், முகாபே, கடாபி, சதாம் ஹுசைன் போன்ற சர்வாதிகாரத் தலைவர்கள் பலரும் இனவாதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியே ஆட்சியாளர்களானார்கள். அதனைப் போன்றே தற்போது கோத்தபாய ராஜபக்ஷவும் சஹ்ரான் என்ற லேபிளைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முயற்சிப்பதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியத் தலைமைகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகிலேயே சிறந்த இராணுவத் தளபதிகளில் ஒருவராக விளங்கும் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்து, துன்புறுத்தியதை மறந்துவிட முடியாது. அவர் என்ன தவறிழைத்தார் என்பதற்காக அந்தத் தண்டனை வழங்கப்பட்டது என்று யாரேனும் அறிந்திருந்தால் கூறமுடியுமா? 3 வருடகாலத்திற்குள் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவருவேன் என்று வாக்குறுதியளித்த சரத்பொன்சேகா அதனை நிறைவேற்றினார். அதன் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று கருதியே கோதத்பாய ராஜபக்ஷ சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்தார். இத்தகைய ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்கு மக்கள் மனநிலையில் பிறழ்வு எதுவும் ஏற்படவில்லை.
மேலும் கோத்தபாய ராஜபக்ஷவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. ஆனால் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவருக்குரிய கடமையின் பிரகாரம் மக்களுக்கு சேவையாற்றுவதிலேயே குறைகளும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. ஒருவேளை கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். எனினும் அவரை வெற்றி பெறச்செய்யும் தீர்மானத்தை மக்கள் மேற்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகின்றோம் என்றும் தெரிவித்தார்.

