தீபாவளி தினத்தில் மோதல் – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

268 0

12-1447301198-clash-in-tipu-jayanthiவவுனியாவில் தீபாவளி தினமான நேற்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்கள் மற்றும் விபத்து காரணமாக வவுனியா வைத்தியசாலையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினமான நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரையிலான 3 மணி நேரத்தில் வவுனியாவில் பல பகுதிகளில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டமோதல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் ஆறு பேரும், இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக 4 பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, மதினா நகர் பகுதியில் தமிழ் இளைஞர்கள் செலுத்தி வந்தமுச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டபோது இப்பகுதி முஸ்லீம் இளைஞர்கள் உதவிக்காக சென்றுள்ளனர்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் பூந்தோட்டம் பகுதியில் இருந்துவந்த இளைஞர் குழுவொன்று உதவிய முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக தமிழ் இளைஞர்கள் இருவரும் முஸ்லீம் இளைஞர் ஒருவரும் காயமடைந்ததாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலையில் இரு தமிழ் இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதனிடையே, வவுனியா, கற்குழி பகுதியில் இடம்பெற்ற தமிழ் இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்றமோதல் மற்றும் வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரணிக்குளம் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு விபத்தின் காரணமாக நால்வர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பத்து பேரும் மாலை 6 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இடைப்பட்ட 3 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

இதேவேளை வவுனியாவில் பல இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மதினா நகர் பகுதியில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலை வளாகத்தினுள் நோயாளர் தவிர்ந்த வேறு எவரும் உட்பிரவேசிக்க முடியாதவாறு வாயிலில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலையும் பூந்தோட்டம், மதீனா நகர், கற்குழி, பம்பைமடு உள்ளிட்ட பலபகுதிகளில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.