ஊழல் மோசடியற்ற அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவினால் ஒருபோதும் உருவாக்க முடியாது.
சஜித் அணியினர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர்கள் மத்திய வங்கியின் பினைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி குற்றஞ்சாட்டினார்.
வியத்மக அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதை இனி ஐக்கிய தேசிய கட்சியினால் எம்மார்க்கத்தினாலும் தடுக்க முடியாது.
முன்வைக்கப்பட்ட சட்ட சிக்கல்கள் அனைத்தும் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. இனி தேர்தலில் போட்டியிடுவதே மிகுதியாக காணப்படுகின்றது.
தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், ஊழல்வாதிகள் இல்லாத அரசாங்கத்தை உருவாக்குவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளமை பொருத்தமற்றதாகும்.
கடந்த நான்கரை வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்தில் இடம் பெற்ற அனைத்து தேசிய நிதி மோசடிகளுக்கும் கட்சியின் பிரதி தலைவர் என்ற ரீதியில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ பொறுப்பு கூற வேண்டும்.
ஊழலற்ற அரசாங்கத்தை இவரால் ஒருபோதும் உருவாக்க முடியாது. மத்திய வங்கியின் பினைமுறி மோசடியுடன் தொடர்புப்பட்டவர்கள் என்று பெயர் குறிப்பிடப்பட்டவர்களும், ஏனைய துறைசார் மோசடிகளுடன் ஈடுப்பட்டவர்களுமே இன்று சஜித் அணியினர் என்று குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.
துரதிஸ்டவசமாக ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சியமைத்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் பாகமாகவே மீண்டும் செயற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

