சீன–இந்தியாவின் புதிய பிரவேசமே: தொண்டமானின் ஆதரவுக்கு காரணம்

191 0

எல்பிட்டிய தேர்தல் பெறுபேறுகளின் மூலம் தெற்கில் கோத்தபாய ராஜபக் ஷ 65வீதத்துக்கும் அதிக வாக்குகளை பெறுவது உறுதியாகியுள்ளது. அத்துடன் சீனா மற்றும் இந்தியாவின் புதிய பிரவேசமே தொண்டமானின் ஆதரவுக்கு காரண மாகியுள்ளது. 

இதன்மூலம்  தேர்தலில் மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்புக்கு இராணுவத்தை மாத்திரம் பலப்படுத்தி செயற்படுத்த முடியாது. வெளிநாட்டு கொள்கையும் முக்கியமானதாகும். அமெரிக்க, சீனா பொருளாதார யுத்தம் எமக்கும் பாதிப்பாகும். அதேபோன்று சீன ஜனாதிபதி தமிழ் நாட்டுக்குவந்தபோது இந்திய பிரதமர் இருநாடுகளின் எல்லை தொடர்பாக தெரிவித்த கருத்து சீனாவின் விடயத்தில் அமெரிக்க கடைப்பிடித்துவந்த கொள்கையில் இருந்து சற்று பின்வாங்க வைத்துள்ளது. இதனால் சீனா, அமெரிக்காவின் புதிய பிரவேசம் அமெரிக்கவாதிகளுக்கு பாரிய அச்சத்தையும் எமக்கு உறுதியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு எங்களுக்குத்தான் கிடைக்கும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து வந்தது. தொண்டமானின் ஆதரவு எங்களுக்குத்தான் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல காலையில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆனால் அன்றையதினம் மாலையில் ஆறுமுகன் தொண்டமான் தனது ஆதரவை கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு வழங்குவதாக குறிப்பிட்டார். தொண்டமானின் இந்த மாற்றமானது இந்திய, சீன நாடுகளுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் புதிய பிரவேசத்தின் தாக்கமாகும்.

மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு 65வீத்துக்கும் அதிக வாக்குகள் கிடைப்பது நிச்சயமாகும். எல்பிட்டிய தேர்தல் பெறுபேறு இதற்கு சான்றாகும்.

அதேபோன்று தொண்டமானின் ஆதரவின் மூலம் மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.  அத்துடன் வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ளன. 6அரசியல் குழுக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்திருக்கின்றன.

2015 ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் அனைவரும் எமக்கு எதிராக செயற்பட்டவர்களாவர். அதனால் வடக்கு தேர்தலில் இம்முறை பாரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அந்த மாற்றம் எமக்கு சாதகமாகவே அமையும் என்றார்.