ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இணைவின் மூலம் 54 வீதமான வாக்குகளை உறுதிப்படுத்திக்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
சஜித் வென்றாலும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில்கூட இந்தளவு பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய லிபரல்வாத கொள்கையே இதற்கு காரணமாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதனால்தான், தான் வெற்றிபெற்றால் புதிய லிபரல்வாத கொள்கையை பின்பற்றப்போவதில்லை என தெரிவிக்கின்றார்.
சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சிக்கு புதியவர் அல்ல. அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்தே புதிய லிபரல்வாத கொள்கைக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்திருக்கின்றார்.
தற்போது அதனை நிராகரிப்பதாக தெரிவிப்பதை நம்பமுடியாது. ஏனெனில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருக்கப்போவது ரணில் விக்ரமசிங்கவாகும். அதனால் சஜித் பிரேமதாச தெரிவிக்கும் எந்த மாற்றமும் இடம்பெறப்போவதில்லை. தற்போது இருக்கும் நிலையே தொடரும்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன இணைந்து செயற்பட தீர்மானித்ததன் மூலம் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு 54 வீத வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையிலே தேர்தல் பிரசாரத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
அதனால் அரசாங்கம் தங்களது தோல்வியை மறைப்பதற்காக கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றது. அரசாங்கத்தின் இந்த குற்றச்சாட்டுக்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.

