தெரணியகலையில் மாணவி மாயம்; நான்காவது நாளாகவும் தேடுதல் தீவிரம்

50 0

தெரணியகலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற்போன தரம் 9இல் கல்விப் பயிலும் கே.கிஸ்ணதேவி என்ற மாணவியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தெரணியகலை உடயங்கந்த தோட்டத்தை சேர்ந்த 14 வயதான குறித்த மாணவி கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற வாணிவிழா பூஜை மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்குப்பற்றி வீடு திரும்பும்போதே மாயமாகியுள்ளார்.

வாணிவிழா கலை நிகழ்ச்சிகள் மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றதைத் தொடர்ந்து பாடசாலையில் இருந்து பஸ்சில் தனது உறவுமுறை சகோதரியுடன் மாணவி வீட்டுக்கு வரும் விழியில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆடுபாலம் வரை இரண்டு மாணவிகளும் சென்றுள்ளனர்.

ஆடுபாலத்தை அண்மித்தவுடன் உடன்சென்ற உறவுமுறை சகோதரி தனது வீட்டுக்கு வந்ததாகவும் காணமல்போன மாணவி ஆடுபாலத்தை கடக்கும்வரை தான் அவரை பார்த்துக்கொண்டிருந்ததாகவும், பாலத்தை கடந்த மாணவி உறவுமுறை சகோதரிக்கு தான் சென்றுவருவதாக சமிக்ஞை காட்டியதாகவும் உறவுமுறை சகோதரி வாக்குமூலம் அளித்ததாக தெரணியகலை பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அன்றையதினம் மாலை 6 மணியாகியும் வீடு திரும்பாத காணாமல் போயுள்ள மாணவியின் தாய் உறவு சகோதரியின் வீட்டுக்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளார். அச்சந்தரப்பத்திலேயே தனது மகள் காணாமல் போனதாக மாணவியின் பெற்றோர் தெரணியகலை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மறுநாள் 9ஆம் திகதி காலை பொலிசார் மோப்ப நாய் கொண்டு சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது சிறுமியை கண்டறியமுடியவில்லை.

தொடர்ந்து மறுநாள் 10ஆம் திகதி  வெள்ளத்தில் ஏதும் அகப்பட்டிருக்கலாமா என சந்தேகம் கொண்டு சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அதன்போதும் கண்டறியப்படவில்லை.

இன்று நான்கு நாட்கள் கடந்தும் குறித்த சிறுமிக்கு என்ன நடந்தது என தெரியாது பொலிசாரும், பாடசாலை ஆசிரியர்களும், ஊர்மக்களும் குடும்பத்தாரும் தொடர்ந்து தேடலில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்தோடு சிறுமியை கண்டறிந்தவர்கள்  பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர். 0773216751,0713998028