சீன அதிபர், பிரதமர் மோடிக்கு காய்கறி சிற்பம் மூலம் வரவேற்பு

39 0

இந்தியாவிற்கு வரும் சீன அதிபரை வரவேற்கும் விதமாக தர்பூசணியில் அவரது உருவத்தை வரைந்து சீன மொழியில் வரவேற்பு வாசகத்தையும் எழுதி கவனம் ஈர்த்துள்ளார் கூடலூரைச் சேர்ந்த காய்கறி சிற்பக்கலைஞர் இளஞ்செழியன்.

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞர் மு.இளஞ்செழியன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கலையில் பல்வேறு உருவங்களை வடிவமைத்து வருகிறார்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட ஏராளமான தலைவர்களின் உருவங்களை காய்கறியில் வடிவமைத்துள்ளார்.

தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகையைச் சிறப்பிக்கும் வகையில் தர்பூசணியில் அவரது உருவத்தையும், பிரதமர் மோடியின் உருவத்தையும் செதுக்கியுள்ளார். மேலும் சீன மற்றும் ஆங்கில மொழியில் வரவேற்பு வாசகத்தையும் அதில் எழுதியுள்ளார்.

இது குறித்து மு.இளஞ்செழியன் கூறுகையில், “காய்கறி சிற்பம் சீனாவில் புகழ் பெற்ற கலையாகும். உலக காய்கறி சிற்பப் போட்டியில் இந்தியா சார்பில் ஒருமுறை நடுவராகச் சென்றிருக்கிறேன். அப்போதுதான் அந்தக் கலையை அவர்கள் எவ்வளவு தூரம் நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். சீன அதிபர், இந்தியப் பிரதமர் மோடி உருவத்தை 3 மணிநேரத்தில் வடிவமைத்தேன். பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களின் உருவத்தை இதில் உருவாக்கலாம்’’ என்றார்.