இரண்டாவது நாளாக மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு: கோவளம் ஓட்டலில் ஆலோசனை

208 0

இரண்டாவது நாளாக பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று கோவளத்தில் சந்தித்து பேசினர். இதையொட்டி கோவளத்தில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. மாலை 5 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் உரையாடியபடி மெதுவாக நடந்து சென்றனர். மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை- துண்டு அணிந்து இருந்தார்.

அர்ஜூனன் தபசு பகுதியை சுற்றிப்பார்த்த பிறகு இருவரும் அருகில் உள்ள வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன அதிபர் ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விருந்து நிகழ்ச்சி முடிவடைந்ததும், சீன அதிபர் ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு காரில் புறப்பட்டார். அவரை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். அவர் சென்றதும், மோடியும் கோவளத்தில் தான் தங்கியுள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சீன அதிபரை வரவேற்ற மோடி
இந்நிலையில், இன்று காலை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து புறப்பட்ட சீன அதிபர், கோவளத்தில் பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு சென்றார். அங்கு இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். அழகான கண்ணாடி அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.