மூன்றாவது நாளாக சிரியாவில் துருக்கி தாக்குதல்

38 0

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியா -துருக்கி எல்லையில் உள்ள குர்து படையினர் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்த தனது படைகளை அமெரிக்கா வாபஸ் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் காரணமாக சுமார் 70,000 க்கும் அதிகமான மக்கள் அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 

இந்தத் தாக்குதல் குறித்து துருக்கி ராணுவம், “ திட்டமிட்டபடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. 300க்கும் அதிகமான குர்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவத் தளங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

துருக்கி மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஈரான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

மோதலைத் தவிர்க்க துருக்கி – குர்து படைகள் இடையே மத்தியஸ்தத்தில் ஈடுபடத் தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.