சீனப்பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியா மாறி விடக்கூடாது – விக்கிரமராஜா

34 0

சீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியா மாறி விடக்கூடாது என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்திப்பது வரவேற்கத்தக்கது. இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும். ஆனால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்தியாவை வணிகத்தலமாக மாற்ற முயற்சித்தால் அதற்கு இடமளிக்க கூடாது.

ஏன் என்றால் சீனப் பொருட்களின் விற்பனை சந்தையாக இந்தியாவை மாற்ற அந்த நாடு முயற்சிக்கும் இதற்கு ஒரு போதும் இடம் அளித்து விடக்கூடாது.

சொத்து வரி உயர்வு, உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகள் வாடகை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரை சந்தித்து பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பல கடைகள் காலியாகி வருகிறது. வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படடு வருகின்றனர். அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. ஆனால் அதிகாரிகள் தடை செய்யாத பிளாஸ்டிக் பொருட்களையும் அள்ளிச் செல்கின்றனர்.

மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்குதலை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் வங்கிகள் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கிறது. வங்கி கணக்கில் பணம் இன்றி காசோலை திரும்பினால் ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும். இது போன்ற நடைமுறையால் மத்திய அரசின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை திட்டம் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.