மதுரை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை

34 0

மதுரை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரையை அடுத்த அலங்காநல்லூர் அருகேயுள்ள கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைப் பெரியன் (வயது 27) இவரது மனைவி அபிநயா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அபிநயாவுக்கு வலசையைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை வெள்ளைப் பெரியன் கண்டித்தார். அதனை அபிநயா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இது தொடர்பாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் வெள்ளைப்பெரியன் கடந்த 10-ந் தேதி மதியம் மனைவி அபிநயாவுடன் வலசைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அங்குள்ள ஒரு தோட்டத்தில் 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ‘ராம்குமாருடன் கள்ளத்தொடர்பை விட்டுவிடு’ என்று வெள்ளைப்பிரியன் கெஞ்சினார். இருப்பினும் ராம்குமாருடன் சேர்ந்து வாழ்வது என்ற முடிவில் அபிநயா உறுதியாக இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளைப் பெரியன் மனைவியை சரமாரியாக தாக்கி கிணற்றில் தள்ளி கொலை செய்தார்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி வீரபாண்டி புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைப்பெரியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மத்திய சிறைக்கு வந்த நாள் முதல் வெள்ளைப்பெரியன் மன உளைச்சலில் இருந்தார். ‘காதலித்து திருமணம் செய்த மனைவி அபிநயாவின் தவறான நடத்தை காரணமாக குழந்தைகள் ஆதரவின்றி அநாதையாகி விட்டனரே’ என்று அழுது புலம்பியுள்ளார்.

இந்த நிலையில் வெள்ளைப்பெரியன் நள்ளிரவு சிறையில் உள்ள கழிவறைக்கு சென்றார். அங்கு கைலியால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

வெள்ளைப்பெரியனை ஜெயில் காவலர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெள்ளைப்பெரியன் பரிதாபமாக இறந்தார்.

சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.