அனைத்து திருடர்களையும் தோற்கடித்து, சிறந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளதாவது, “ராஜபக்ஷ ஆட்சியில் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு அதிகம் காணப்பட்டது.
இதனை நிறுத்துவதாக கூறியே நல்லாட்சி என்ற பெயரில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அது நடக்கவில்லை. இவர்கள் வழக்கம் போல மோசடி, ஊழல்களிலேயே ஈடுபட்டனர்.
ஆகையால் தற்போதுள்ள புதிய திருடர்களையும் பழைய திருடர்களையும் தோற்கடித்து இலங்கை அரசியலில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆகையாலேயே இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக நாமும் களமிறங்கியுள்ளோம்.
மேலும் நாட்டை சிறந்த பாதையை நோக்கி கொண்டுச்செல்வதற்காக திசைக்காட்டி சின்னத்தை தேர்வு செய்துள்ளோம்.
அதனடிப்படையில் மக்களையும் சிறந்த பாதையை நோக்கி கொண்டுச்செல்வோம். அதற்காக மக்களும் தங்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

