அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளம்-ஜனாதிபதி

295 0

presidentஅங்கவீனமுற்ற அனைத்து படைவீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தை அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானத்துக்கு வந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இம்முன்மொழிவு தொடர்பில் அரசாங்கம் கடந்த ஆண்டு தீர்மானத்தை எட்டி அதற்காக 2017 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் சிலரின் தேவைக்காக ஆர்ப்பாட்டங்கள் கூட இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

எவ்வாறான விமர்சனங்கள், தூற்றுதல்கள் வந்தாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பின்பற்றும் கொள்கை துளியளவு கூட மாற்றப்படாது.

முப்படையினருக்கு தேவையான வளங்களை குறையின்றி வழங்கி அவர்களைப் பலப்படுத்துவதுவதுடன் போர்க்களத்தில் போரிட்ட வீரமிகு படையினரின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக எப்போதும் பாடுபடுவேன்.

தாய்நாட்டின் முன்நோக்கிய பயணம் தொடர்பான புரிந்துணர்வற்ற, நாட்டின் தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிடுவோரின் சந்தர்ப்பவாத செயற்பாடுகளால் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சரென்ற வகையிலும் என்னிடம் பின்னடைவை ஏற்படுத்த முடியாது.

சில அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கேற்றவாறு நாட்டின் தேசிய பாதுகாப்பை இயக்குவதற்கு தயாரில்லை.

போரில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் கருத்தியல் ரீதியாக தோற்கடிக்கப்படாத, நாட்டுக்கு வெளியிலிருந்து ஒருபோதும் அடைய முடியாதவற்றை கனவு கண்டுகொண்டிருப்பவர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிப்பதற்கு மிகவும் நட்புறவுடனான சர்வதேச கொள்கையுடன் செயற்படுகிறோம் என்று மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் போரில் ஈடுபட்ட இராணுவ, கடற்படை, விமானப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் படை அலுவலர்களுக்கு பரம வீர விபூஷண, வீரோதார விபூஷண, வீர விக்ரம விபூஷண, ரணவிக்ரம, ரணசூர பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சரத் பொன்சேகா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.