பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

225 0

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.சென்னையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு நீங்கள் எப்போது செல்கிறீர்கள்?

பதில்:- கீழடி அருங்காட்சியகத்திற்கு ஏற்கனவே அமைச்சர் பலமுறை சென்று வந்திருக்கிறார். அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுகுறித்த அறிக்கைகள், கிடைக்கும் பொருட்கள் பற்றிய விவரங்களை எனக்கு அளித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு தேவையான வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

கேள்வி:- விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலுக்கு உண்டான களச்சூழல் எவ்வாறு உள்ளது?, அங்கு நிச்சயமாக பணம் தான் வெல்லும் என்ற ஒரு கருத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்கிறாரே?

பதில்:- அப்படி என்றால் அவர் பணம் கொடுப்பார் என்று தான் அர்த்தம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் அவர் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வேலூர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை, அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டில் சோதனையிட்டு பணம் பறிமுதல் செய்ததை பார்த்தோம். எனவே அவர் அந்த நினைப்பில் இருப்பார்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் 2 தொகுதிகளிலும் மக்களின் செல்வாக்கோடு நாங்கள் வெற்றி பெறுவோம்.

திமுக கொடி

கேள்வி:- தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?

பதில்:- ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. ஏற்கனவே உள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போது எதுவும் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே அவர்களுடைய ஆட்சியில் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்.

இவ்வளவு காலம் மறந்துவிட்டார் என நான் நினைக்கிறேன். எங்களை பொறுத்தவரைக்கும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்ற வகுப்பினருக்கு உரிய முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விகிதாச்சார முறையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டத்தின் வாயிலாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெற்றுத்தந்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. என எல்லா பிரிவினருக்கும் சட்டப் பாதுகாப்புடன் இடஒதுக்கீட்டை பெற்று தந்தது ஜெயலலிதாவின் அரசு.இவ்வாறு அவர் பதிலளித்தார்.