ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் மேற்கொண்ட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின்படி இருநாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான சிறந்த அடித்தளம் இருப்பது தெளிவாகியிருப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசிய விவகார அமைச்சர் தாரிக் அஹமத் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசிய விவகார அமைச்சரும், முரண்பாடுகள் உள்ள இடங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்குமான பிரதமரின் விசேட பிரதிநிதியுமான தாரிக் அஹமத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்நிலையில் தனது இலங்கை விஜயம் குறித்து காணொளி ஒன்றில் பேசியிருக்கும் தாரிக் அஹமத் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கைக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் மிக நீண்டகாலமாக வலுவான நட்புறவொன்று இருந்துவருகிறது. பெருமளவான புலம்பெயர் தமிழர்கள் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்றனர். வர்த்தக மேம்பாடு, பொதுவான சுபீட்சம் என்பனவற்றை நோக்காகக் கொண்டு இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று இலங்கையில் குறித்தவொரு சமூகத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒத்துழைப்புக்களும் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தோடு மனித உரிமை விவகாரங்களிலும் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும். இலங்கைக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான நட்புறவைப் பொறுத்தவரை அதற்கு ஒரு வலுவான அடிப்படை உள்ளது. அதனை மையமாகக்கொண்டு இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்த முடியும்.
ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் மேற்கொண்ட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் பிரகாரம், இருநாட்டு உறவையும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான சிறந்த அடித்தளம் காணப்படுகின்றமை தெளிவாகியிருக்கிறது.

