எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 35 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்து தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தபோதிலும் 35 வேட்பாளர்களே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முஸ்தீபுகளில் பிரதான அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சி நிரல்களும் தயாரிக்கப்பட்டு பிரசார நடவடிக்கைகளுக்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் 5 சிறுபான்மை இனத்தவர்களும் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சியின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு சகலரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டுமென்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியிருக்கின்றார்.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் வேட்பாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். தேர்தலை நீதி நியாயமாக நடத்துவதற்கு சகல வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதேபோன்று ஊடகங்களும் நடுநிலைமையுடன் செயற்படவேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலத்திரனியல் ஊடகங்களோ அல்லது அச்சு ஊடகங்களோ வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாகவும் மற்றொரு வேட்பாளருக்கு எதிராகவும் செயற்படக் கூடாது. சகல வேட்பாளர்களுக்கும் சம உரிமை அடிப்படையில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் பதிவேற்றும் விடயத்திலும் நடுநிலைமை பேணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனைவிட பிரசாரக் கூட்டங்களின்போது வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் செயற்படவேண்டிய விதம் தொடர்பிலும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசியல் கலப்படமின்றி செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உண்மையிலேயே மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை அவர்கள் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப நாட்டின் தலைவரை தெரிவுசெய்வதற்கு சுதந்திரமான நீதியான தேர்தல் என்பது அவசியமானதாகும். வன்முறைகளற்ற, எதேச்சாதிகாரங்களற்ற வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப நாட்டின் தலைவரை தெரிவுசெய்ய முடியும்.
இந்த விடயத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகத்துறையினர் உட்பட சகல தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். பொலிஸார் சகல தரப்பினருக்கும் நடுநிலைமையாக செயற்படுதல் அவசியமாகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல்வேறு தேர்தல்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை வரலாறாக உள்ளது. இத்தகைய வன்முறைக் கலாசாரம் இனியும் தொடரக்கூடாது.
-2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவில் வன்முறைகள் இடம்பெறாத போதிலும் அச்சுறுத்தல்களும் அசம்பாவிதங்களும் இடம்பெற்று இருந்தன. அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக் ஷ தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியிலிருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். இதன்போது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பொது எதிரணியினர் பிரசாரத்தில் ஈடுபடவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
-இறுதிநாள் பிரசாரம் கொழும்பு மருதானை பஞ்சிகாவத்தை பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் அன்று எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தனது பாதுகாப்புத் தரப்பினருடன் சென்று வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை இறுதிப் பிரசாரக் கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்தார். இவ்வாறு அச்சுறுத்தல்கள் அந்தத் தேர்தலில் நிலவியிருந்தது.
-இதேபோன்றே 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதும் பிரசாரங்களின்போதும் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. அச்சுறுத்தல்கள் நிலவியிருந்தது. அன்று எதிரணி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டிருந்தார். தேர்தல் பிரசாரக் காலத்தில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே எதிரணியினர் பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது.
இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், உள்ளூராட்சித் தேர்தலிகளின்போதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. மாகாண சபைத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டபோதும் கூட அங்கும் பல்வேறு வன்முறைகள் வெடித்திருந்தன. இதனால் உயிரிழப்புகளும் சொத்திழப்புகளும் ஏற்பட்டன.
-இத்தகைய வன்முறைக் கலாசாரம் இனியும் இடம்பெறக்கூடாது. வன்முறைகளற்ற வகையில் நீதி நியாயமான தேர்தலை நடத்துவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இதற்கான கோரிக்கையைத் தான் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்திருக்கின்றார்.
-பொதுமக்களும் ஊடகத்துறையினரும் தனித்துவமாக செயற்பட்டு நீதி நியாயமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பதுடன் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக யாரேனும் செயற்பட்டால் அதுகுறித்து அறியத்தருமாறும் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டிருக்கின்றார். எனவே நீதியான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து சகல தரப்பினரும் செயற்படவேண்டியது இன்றியமையாததாக உள்ளது.
நாட்டில் வன்முறைகளற்ற தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. விருப்பு வாக்கு முறையின் காரணமாகவே கட்சிகளுக்கிடையேயும் வேட்பாளர்களுக்கிடையேயும் முரண்பாடுகள் ஏற்பட்டு வன்முறைகள் அதிகரித்து வந்தன. ஒரு கட்சிக்குள்ளேயே விருப்பு வாக்கின் காரணமாக வேட்பாளர்கள் முட்டி மோதும் நிலைமை ஏற்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரதலக்ஸ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருந்தார். உள்ளூராட்சி தேர்தல் வாக்கெடுப்பின்போது பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர குழுவினருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தலைமையிலான குழுவினருக்குமிடையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இந்த மரணம் சம்பவித்திருந்தது.
-ஒரே கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுகளுக்கு காரணமாக இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறைமை காணப்பட்டது. இதனால்தான் விருப்பு வாக்கு தேர்தல் முறையினை இல்லாதொழித்து புதிய தேர்தல் முறையினை கொண்டுவரவேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பொது எதிரணியின் சார்பில் தேர்தல் முறை மாற்றத்துக்கான உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.
-இதற்கிணங்கவே உள்ளூராட்சித் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த விடயத்தில் தற்போது இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. உள்ளூராட்சி தேர்தல் புதிய முறையில் இடம்பெற்றிருந்தபோதிலும் அந்த முறைமையிலும் குறைபாடுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளும் எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்ற. விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்று சிறுபான்மைக் கட்சிகள் கருதுகின்றன.
ஜனநாயக ரீதியில் நீதி நியாயமான தேர்தல்கள் இடம்பெறாமையின் காரணமாகவே தேர்தல் முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. இந்தத் தேர்தல் நீதி நியாயமாக இடம்பெறுவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள் தாம் விரும்பிய தலைவரை தெரிவு செய்வதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
இதேபோன்றே ஏனைய தேர்தல்களை காலதாமதம் இன்றி நடத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஜனநாயகம் நாட்டில் தழைத்தோங்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்த விரும்புகின்றோம்.

