தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒற்றுமையே கடைசி ஆயுதம் -வேலுகுமார்

181 0

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒற்றுமை என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி ஆயுதமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இதனால் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைய முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் கூறுகையில், “தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒற்றுமை என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி ஆயுதமாகும்.

எனவே அந்த ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை கூறுபோடுவதற்காக பேரினவாதிகள் பல வழிகளிலும் பொறிகளை வைத்து வருகின்றனர்.

இந்த கபட நோக்கத்தை அறியாமல், வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் தலைவர்கள், கொள்கைகளுக்கு அப்பால் கட்சி அரசியலை முன்னிலைப்படுத்துவதால் பேரினவாதிகளின் திட்டம் வெற்றிகரமாக அரங்கேறி வருகின்றது.

இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலை எவ்வாறு தமிழ் மக்களுக்கு சார்பானதாகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர்களை வெற்றிபெற வைப்பதற்கான களமாகவும் பயன்படுத்துவது என்பது தொடர்பாகவே தமிழ்க் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் நலன்கருதி, விட்டுக்கொடுப்புகள் இணைந்து செயற்பட வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகள் முன்வர வேண்டும்” என அவர் கூறினார்.