புதிய தலைமுறையின் ஜனாதிபதியாக சஜித்தை வெற்றியடைய செய்வோம்-மனோ

176 0

மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தனக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் தான் ஜனாதிபதியாக வந்தவுடன் முதற்பணியாக மலையக மக்களுக்கு ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும் என்பதை உறுதியளித்துள்ளதாகவும், தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று (06) காலை அட்டனில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 52 வயது இளைஞரான சஜித் பிரேமதாச இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இவர் புதிய தலைமுறைகளின் தலைவராக செயல்படுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சஜித் பிரேமதாச சற்று வித்தியாசமாக யோசிப்பவர். அவரை பலப்படுத்துவது மலையக மக்களின் பொறுப்பாகும். அதேபோன்று தமிழ் முற்போக்கு கூட்டணியை பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இப்போது தனி அரசாங்கம் இல்லை. 4, 5 கட்சிகள் சேர்ந்த கூட்டு அரசாங்கமாகும். அதில் பங்காளி கட்சியாக தமிழ் முற்போக்கு கூட்டணி செயல்படுகின்றது. அதேநேரத்தில் நாம் நமது மக்கள் அரசாங்கத்தை அல்லது ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடைய செய்ய பங்களிப்பு வழங்கி அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பவராக இருக்காது. எமது மக்களுக்கு பெற்றுக் கொள்ள கூடிய உரிமைகள் தொடர்பில் நாம் கோரிக்கைகளை முன்வைத்து வெற்றிப்பெற வேண்டும்.

கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இன்று வெற்றிப்பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் கரத்தை பலப்படுத்த அதிக வித்தியாசத்தில் வாக்களித்து அவரை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.

அதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி பாடுப்படுவதுடன் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய காணிகள் வழங்கும் சட்டத்தின் கீழ் மலையகமும் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், மலையகத்தில் நீண்டகால தேவைப்பாடாக இருக்கின்ற பல்லைகழகம், நுவரெலியாவில் விரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெகுவிரைவில் நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைகழகம் அமைக்கப்படவுள்ளது.

அது எங்கள் இனத்தின் கல்வி எழுச்சியின் அடையாளமாக ஓங்கி ஒளிரும். அதேநேரத்தில் பெருந்தோட்ட தொழில்துறைக்கு அப்பால் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் மாற்று கைதொழில் துறையில் சிறந்து விளங்க பயிற்சி மற்றும் தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கவும், கோரியுள்ளோம்.

இந்த நாட்டில் தேயிலை வருமானத்தில் 75 வீத வருமானம் சிறு தோட்ட பயிர்செய்கைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களும் தென் மாகாண மக்களை போல தமது சொந்த நிலங்களுக்கு சிறு முதலாளிகளாக இருப்பதை போல் பெருந்தோட்ட தொழிலாளர்களும் உருவாக்கபட வேண்டும். வழங்கப்பட்டுள்ள 7 பேர்ச்க்கு அப்பால் தேயிலை நிலங்களுக்கு உரிமையுடையவர்களாக தேயிலை காணிகளை இவருக்கு பிரித்து கொடுத்து அதற்கு சொந்தமாகும் சிறு முதலாளிகளாக நமது மக்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தம் மூலம் வருமானத்தை பெருக்கி கொள்ள முடியாது. இவ்வாறான இன்னும் பல திட்டங்களை மக்களுக்காக முன்வைத்துள்ளோம என அவர் மேலும் தெரிவித்தார்.