கோட்டாபய எனது வார்த்தையை கேட்க மறுத்தார்- ரத்ன தேரர்

225 0

கடந்த 2015 ஆம் ஆண்டே, பிரதமராகப் பதவியேற்கும்படி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தான் கோரியதாகவும், அந்தக் கோரிக்கையை அன்று அவர் ஏற்றிருந்தால் நாட்டின் அரசியல் சூழ்நிலை தற்போது சிறப்பாக மாற்றமடைந்திருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அத்துரலிய ரத்ன தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சி செய்தோம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு  பொதுத் தேர்தலின்போது, நான் 10 கடிதங்களுக்கு மேல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியிருந்தேன்.

கோட்டாபய ராஜபக்ஷவுடனும் கலந்துரையாடியிருந்தேன். கோட்டாபய ராஜபக்ஷவிடம், பிரதமராகும்படி நான் கேட்டுக்கொண்டேன். இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைக்கோர்க்குமாறும் நான் கோரினேன்.

இதுதொடர்பாக நான் இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு கடிதங்களை அனுப்பியிருந்தேன். எனினும், துரதிஷ்டவசமாக எம்மால் இவற்றை மேற்கொள்ள முடியாதாது போனது.

எனது இந்த முயற்சியானது அன்று நிறைவேறி இருந்தால், இன்று இந்த அரசியல் சூழ்நிலை முற்றாக மாற்றமடைந்திருக்கும்.

எவ்வாறாயினும், சிறந்தொரு தலைமைத்துவத்தை எதிர்க்காலத்தில் நாட்டுக்கு வழங்க, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க நாம் தயாராகவே இருக்கிறோம்.

இந்து சமுத்திரத்தின் சிறந்ததொரு நாடாக மீண்டும், இலங்கையை கட்டியெழுப்ப நாம் அவருக்கு ஆதரவளிக்கத் தயார் என்பதை கூறிக்கொள்கிறோம்.

நாட்டையே சர்வதேசத்திற்கு விற்ற, இந்த தரப்பினரை தோற்கடித்து, இந்த கொள்கைக் கும்பலை விரட்டியக்க நாம் ஒன்றுபட வேண்டும்.

சிறைச்சாலைக்குள் எம்மைத் தள்ளி, எமது பயணத்தை தடுக்க முடியாது. அவ்வாறான செயற்பாடுகளின் அவர்கள் ஈடுபட்டால், அதுதான் எமக்கான ஊக்கமாகவும் அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.