ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் அறிய முடிகின்றது. ஐக்கிய தேசிய கட்சியினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி பலமான கூட்டணியாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர எம்.பி.க்கு விடுத்த அழைப்பின் பெயரில் சந்திப்பொன்றை நடத்த முயற்சிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களின் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.
நேற்றைய தினம் இந்த சந்திப்பை நடத்த இரண்டு தரப்பினரும் முயற்சிகளை எடுத்த போதிலும் அவ்வாறான சந்திப்பொன்றை நடத்த முடியாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது. நேற்றைய தினம் இரவு 7.30 மணியளவில் இருவரும் சந்திக்க இருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தரப்பினர் உறுதிப்படுத்தினர்.
ஆனால் குறித்த நேரத்தில் ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு குழுக் கூட்டம் இடம்பெற்ற காரணத்தினால் இருவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவில்லை. எனி னும் இன்று அல்லது நாளை இந்த சந்திப்பை நடத்த முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அறிந்துகொள்ள முடிகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகள் மற்றும் நிராகரிப்புகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சில மாற்று நகர் வுகளை கையாள முயற்சிக்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதிக்கும் சஜித் பிரேம தாசவுக்கும் இடையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

