ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கான ஆயுட் காலம் நீடிப்பு

329 0
அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கான ஆயுட் காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2015 ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த 26 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

குறித்த காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மோசடிகள், சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல், ஏமாற்றுதல் மற்றும் அதிகாரம் அல்லது தத்துவம், அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சொல்லப்பட்ட குற்றங்கள் மற்றும் தவறான செயற்பாடுகளின் பெறுபேறாக அரச சொத்துக்களுக்கு, அரச வருமானத்துக்கு பாரியளவு நட்டம் அல்லது சேதத்தை ஏற்படுத்தியிருத்தல் தொடர்பில் அரசியல் பதவி வகித்த அல்லது தொடர்ந்தும் பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஆட்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நியதிச் சபை உத்தியோகத்தர்களாகவும் பணியாற்றிய மற்றும் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டிருக்கின்ற ஆட்களுக்கு எதிராகப் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள், தகவல்கள் மற்றும் ஏனைய விடயங்களைக் கோருதல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

குறிப்பிடப்பட்டுள்ள முறைப்பாடுகள், தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் துரிதமாக, பக்கச்சார்பற்ற, விரிவான புலனாய்வுகளையும் விசாரணைகளையும் நடத்துதல் இந்த ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையிலான இந்த விசேட ஆணைக்குழு கடந்த ஜனவரி 17 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.