சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை அலரி மாளிகைக்கு அழைக்கும் அதிகாரம் பிரதமருக்கு கிடையாது – ஜி. எல்

205 0

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளை அலரி மாளிகைக்கு வரவழைக்கும்  அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடையாது.

சட்டமா அதிபர் திணைக்களத்தை தொடர்புப்படுத்தி தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் இதுவரையில் மறுப்பு தெரிவிக்காதது ஏன் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் கேள்வியெழுப்பினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியே  ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வேட்பாளராக தன்னை பெயர் குறிப்பிடுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸ முன்னெடுத்த செயற்பாடுகள் முறையற்றதாகும்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் எதிர்க்க முடியாதவர்கள்.

இன்று முறையற்ற விதத்தில் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

அரசியல் அழுத்தங்களின் பிரகாரமே சட்டமா அதிபர் திணைக்களம்  செயற்படுகின்றது என்பது தற்போது ஆதார பூர்வமாக வெளிப்பிட்டுள்ளது.

அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக முன்னாள் சொலிஷ்டர் ஜெனரால் தில்ருக்ஷ டயஸ் விக்ரமசிங்க குறிப்பிட்டதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் முழுமையாக இன்று மறக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.