இலங்கைக்கு கனடா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்(காணொளி)

339 0

batticalloஇலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க கனடா தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு அரசடிசந்தியில் உள்ள பொதுநூலகத்தில் ‘பாடும் கரங்கள்’விழிப்புலன் அற்றோருக்கான கைமுறை சிகிச்சை மற்றும் பயிற்சி நிலையம் நேற்று காலை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கருத்துத் தெரிவிக்கும்போதே ஷெல்லி விட்டிங் இவ்வாறு தெரிவித்தார்.

கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கனடிய உலக பல்கலைக்கழகத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் அவர்களினை மன அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

உலக பல்கலைக்கழகத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவுக்கான ஆலோசகர் ஜெனீவர் ஹார்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விழிப்புலனற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் பயிற்சிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர்,

கிழக்கு மாகாணத்தில் பல இளைஞர்கள் வேலையற்ற நிலையில் உள்ளனர்.அவர்களுக்கு சுற்றுலாத்துறையினை சிறந்த முறையில் அபிவிருத்திசெய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்ககூடிய சூழ்நிலையினை உருவாக்கமுடியும்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிக்கும் நான் விஜயம்செய்தபோது அங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துமாறும் வாழ்வாதாரத்தினை அதிகரிக்குமாறுமே கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

சகல சமூகமும் சகல தனி நபரும் இலங்கையும் பொருளாதார ரீதியில் சிறந்த இடத்தினைப்பெறுவதற்கு எமது நாடு தொடர்ந்து உதவிகளை வழங்கும்.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் பின்னர் சுற்றுலாத்துறையினை அபிவிருத்திசெய்வதற்கு பெரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.அதிகளவான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இலங்கை பல இயற்கை வளங்களையும் இயற்கை காட்சிகளை இயற்கையாக கொண்டநாடாகும்.அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த சூழல் இங்குள்ளது.அதற்கான மேம்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகளம் தேவையாகவுள்ளது.

கனடாவும் இலங்கையும் ஒரே நோக்குடனேயே செயற்படுகின்றது.கனடாவும் பொருளாதாரத்தினை நோக்காக கொண்டுசெயற்படுகின்றது. இலங்கையும் அதேநோக்குடனேயே செயற்படுகின்றது. இலங்கையின் முன்னேற்றத்திற்கான போதுமான உதவியை கனடா வழங்கும் என்றும் தெரிவித்தார்.