பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க கோரிய வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

181 0

பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க கோரிய வைகோவின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்தது. மேலும் மாநில அங்கீகாரத்தை பறிக்கும் வகையில் 2 யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.

இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காஷ்மீரில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி வீட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் வைகோ மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைகோவின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மனுதாரர் காஷ்மீர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடலாம் என நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது தொடர்பான அமைப்பிடம் முறையிட வேண்டும் என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.