ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரேமதாசாக்களின் போராட்டங்கள்!

218 0

கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து  தந்தையார் ரணசிங்க பிரேமதாச  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதைப் போன்று மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மகன் சஜித் பிரேமதாசவும் எதிர்ப்புக்களை முறியடித்து அதே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

கட்சி நியமனத்தை வழங்குகிறதோ இல்லையோ 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவதென்று முடிவெடுத்த  தந்தையார் தனது நீண்டகால அரசியல்  விசுவாசியான சிறிசேன குரேயிடம் தேர்தலைச் சந்திக்கத் தயாராகுமாறு கூறியது  பழைய அரசியல் அவதானிகளுக்கு நன்கு நினைவிருக்கும். அதே போன்றே மகனும் தன்னை  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக நியமிப்பதற்கு இணங்குகிறாரோ இல்லையோ 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவில் மாற்றமில்லை என்றே கூறிக்கொண்டிருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின்  உயர்மட்டத்தில் தந்தையாருக்கு எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அவர் கட்சியை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து தலைமைத்துவத்தை இறங்கிவரச்செய்து தான் நினைத்ததைச் சாதித்தார். அதேபோன்றே மகனும் கட்சிக்குள் இருந்துகொண்டே துணிச்சலுடன் செயற்பட்டு தலைமைத்துவத்தை இணங்கச்செய்து  தான் நினைத்ததை சாதித்திருக்கிறார்.

அன்று தனது அரசியல் எதிர்காலம் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே இருந்தது என்பதை தந்தையார் புரிந்து கொண்டு சாதுரியமாக செயற்பட்டதைப் போன்று மகனும் நடந்துகொண்டுள்ளார். தந்தையாரின் அரசியலில் இருந்து பெற்ற படிப்பினைகள் மகனுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

அன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்பிய முக்கிய அமைச்சர்களான காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி போன்றவர்கள் பிரதமர் பிரேமதாசவுடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்தனர்.ஆனால், வேட்பாளர் நியமனம் தொடர்பில் கட்சிக்குள் போட்டி மூளுவதை அந்தக்கட்டத்தில் விரும்பாத ஜெயவர்தன  செயற்குழுவினதும் பாராளுமன்றக்குழுவினதும் கூட்டுக் கூட்டத்தில் தானே பிரேமதாசவை வேட்பாளராக முன்மொழிந்ததுடன் திசாநாயக்கவும் அத்துலத் முதலியும் கூட்டாக ஆமோதிக்கவும் ஏற்பாட்டைச் செய்தார்.

பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக கட்சியினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். அதே போன்றே இன்றும்   கூட்டுக்கூட்டத்தில் தலைவரான பிரதமர்  விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை வேட்பாளராக முன்மொழிந்தபோது கட்சி ஏகமனதாக அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது.

அன்று பிரேமதாசவை வேட்பாளராக நியமித்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் கட்சியின் தலைவர் ஜெயவர்தனவின் அரசியல் நிலைக்கும் இன்று சஜித்தை வேட்பாளராக நியமித்தபோது தலைவர் விக்கிரமசிங்கவின் அரசியல் நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது.ஜெயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற முடிவெடுத்த பிறகே பிரேமதாசவுக்கு இடம்கொடுத்தார். மூன்றாவது பதவிக்காலத்துக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ஜெயவர்தன அரசியலமைப்புக்கு புதிய திருத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்ததாகவும் ஆனால், பிரேமதாசவின் கடுமையான எதிர்ப்பையடுத்து அதைக் கைவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், பிரதமர் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடவிரும்புகின்ற நிலையிலேயே சஜித்தை வேட்பாளராக நியமிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானார். விக்கிரமசிங்க தலைவராக இருந்துவரும் இதுவரையான கால்நூற்றாண்டு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றிபெற முடியவில்லை. அவர் கட்சியின் தலைவரான பிறகு  நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்றன.அவற்றில் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்ட அவர் அடுத்த இரு தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்த்து எதிரணியின் பொது வேட்பாளர்களுக்கு விட்டுக்கொடுத்தார். அவரின் தலைமையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும்  என்று  கட்சியினர் நம்பவில்லை. நவம்பர் 16 தேர்தல் விக்கிரமசிங்க போட்டியிடுவதை தவிர்க்கவேண்டிய நிர்ப்பந்தத்தை சந்திக்கும் மூன்றாவது தொடர்ச்சியான ஜனாதிபதி தேர்தலாகும்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான தனது விருப்பத்தை நீண்டநாட்களாக வெளிக்காட்டி வந்த போதிலும், பிரதமர் விக்கிரமசிங்க மர்மமான ஒரு மௌனத்தையே கடைப்பிடித்துவந்தார். ஆனால், சஜித் பிரேமதாச கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரின் ஆதரவுடன் பொதுமக்கள் மத்தியில் இறங்கி வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான பிரசாரங்களை தீவிரப்படுத்திய பிறகு கடைசிக் கந்தாயத்தில் தான் தனக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இருக்கிறது என்று பிரதமர் அறிவித்தார். ஆனால், காலம் கடந்துவிட்டது. அவரை வேட்பாளராக களமிறக்கினால் நிச்சயம் தோல்வியைத் தழுவவேண்டிவரும் என்று அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே கூறத்தொடங்கினார்கள்.

அவர்கள் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவிலை.ஆனால், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிப்பதற்கு பிரதமரை நிர்ப்பந்திக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள்.இறுதியில் அதைச் சாதித்தும் விட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்ததும் பிரதமரால் அதற்கு மேலும் பிரதமருக்கு வேறு வழியிருக்கவில்லை.அந்த  தலைவர்கள் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்குமாறு கூட்டாக கடிதமொன்றையும் கடந்தவாரம் கையளித்தனர்.

நிலைவரம் தனது கையைவிட்டுச் செல்கிறது என்பதை புரிந்துகொண்ட பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு  இறுதியில் தனது பிடிவாதத்தைக் கைவிடுவதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. கட்சியின் தலைவராக தொடர்ந்து இருப்பதற்கான வழிவகைகளைப் பற்றியே அவர் சிந்திக்கவேண்டியிருக்கிறது. சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரத்திட்டங்கள் பிரதமரின் வழிநடத்தலின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கினற போதிலும், அவர் எந்தளவுக்கு முழுமூச்சாக அதில் ஈடுபாடுகாட்டுவார் என்பதை பொறுத்திருந்தே அவதானிக்கவேண்டும். ராஜபக்ச முகாமில் உள்ள  அரசியல்வாதிகள் பிரேமதாசவை  தோற்கடிப்பதற்கு அந்தரங்கமாக பிரதமர் முயற்சிப்பார் என்று கூறுவைதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தந்தையார் பிரேமதாசவை வேட்பாளராக நியமித்த ஜெயவர்தன  ( தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுனவின் கிளர்ச்சியும் வடக்கு, கிழக்கில் விடுதலை புலிகளும் கிளர்ச்சியும் தீவிரமடைந்திருந்த ) அந்த  காலகட்டத்தின் நெருக்கடியான நிவைரத்துக்கு மத்தியில் அவர் தோல்வியடைவார் என்றே எதிர்பார்த்ததாக கூறப்பட்டது. வாக்களிப்பு  வீதம் உயர்வானதாக இருந்தால் சிறிமா பண்டாரநாயக்கவுக்கு வெற்றிவாய்ப்பு கூடுதலாக இருக்கும் என்பதால் வாக்களிப்பு வீதம்  சாத்தியமானளவுக்கு குறைந்த பட்சமாக இருப்பதை உறுதிசெய்வதே பிரேமதாசவின் தந்திரோபாயமாக இருக்கிறது என்று தன்னை அழைத்து ஜெயவர்தன கூறியதாக பாராளுமன்றத்தில் அநுரா பண்டாரநாயக்க ஒரு தடவை  கூறினார். வாக்களிப்பு வீதம்  சாத்தியமான அளவுக்கு கூடுதல் பட்சமானதாக இருப்பதை உறுதிசெய்து திருமதி பண்டாரநாயக்கவை வெற்றிபெறச்செய்யுங்கள் என்பதே தங்களுக்கு ஜெயவர்தன கூறவந்த யோசனை என்பதே அநுராவின் அந்தப்பேச்சின் அர்த்தமாகும்.

வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு  தந்தையார் பிரேமதாசவுடன் கட்சிக்குள்  போட்டிபோட்ட  காமினி திசாநாயக்கவும் லலித் அத்துலத்முதலியும் அவரின் தேர்தல் பிரசாரங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடுகாட்டினார்கள். அவர்கள் இருவரும் பிரேமதாசவின் பிரசார மேடைகளில் வலிமையான பேச்சாளர்களாக விளங்கினார்கள். பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில்  வெற்றிபெறவைத்து தாங்கள் பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே இருவரும் அவ்வாறு செய்தனர் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் மீதான வெறுப்பை  பிரேமதாச தனது அமைச்சரவை நியமனத்தின்போது வெளிப்படையாகக் காட்டவே செய்தார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்குவதற்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் 25 வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி பதவியை கட்சி கைப்பற்றுவதற்கான நம்பிக்கையான வாய்ப்பாக கருதுகிறார்கள்.அதனால் அவர்கள் பெரும்பாலும் ஒற்றுமையாக பிரசாரங்களைச் செய்வதில் அக்கறை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.தந்தையார் பிரேமதாசவே இறுதியாக ஜனாதிபதியாக  பதவி வகித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்.மகன்  தேர்தலில் வெற்றிபெறுவாரேயானால், தந்தையாருக்கு பிறகு ஜனாதிபதி பதவியை கட்சி மீண்டும் பெற்றுக்கொடுத்தவராக பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

வீ.தனபாலசிங்கம்